“நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16).

என்ன ஒரு அற்புதமான காரியம்! இந்த பரிசுத்த ஆவியானவர் ஒருநாளும் நம்மை விட்டு விலக மாட்டார். வேதம் அவரைக் குறித்துச் சொல்லும்பொழுது சத்திய ஆவியானவர் நம்மைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் என்றால் நாம் வழிதப்பிப் போகமாட்டோம். நம்முடைய ஞானம், அறிவு ஒன்றுமில்லை. எல்லாம் குப்பை. ஆனால் தேவன் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் திரியேக தேவனுள் ஒருவரான பரிசுத்த ஆவியானவர் நம்மோடு என்றென்றைக்கும் வாசம் பண்ணுகிறவராக இருக்கிறார். நம்முடைய ஆத்துமாவுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் விடுதலையும் கொடுக்கிற ஒரு அருமையான தேவன் இவர். நம்முடைய வாழ்க்கையின் இக்கட்டான வேளைகளில் நம்மைத் தேற்றுகிறவர். இந்த தேவன் நம்மோடு கூட இருப்பார் என்றால் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தப் பொல்லாத உலகத்தில் அவர் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவார். ஆவிக்குரிய வாழ்க்கையில் எப்பொழுதும் இவ்விதமான விலையேறபெற்ற பொக்கிஷங்களை தேவன் நமக்கு கொடுக்கின்றார். ஒருகாலத்தில் பாவத்தைச் செய்து கொண்டு அதன் விளைவை அனுபவித்தோம். ஆனால் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் மாற்றப்பட்டபொழுது ஆவிக்குரிய விலையேறபெற்ற பொக்கிஷங்களாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவைகளை கர்த்தர் நமக்குக் கொடுத்து, எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் நம்மைக் காப்பற்றி வழிநடத்துகிறார். அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக வாழுவோம்.