அக்டோபர்  4    

“அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்” (அப்., 4: 31)

 பரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் குறித்து இன்று பலவிதமான ஆவிக்குரிய குழப்பங்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் நிறைவை தேவன் நமக்கு வேதத்தில் வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவன் ஒரு விசேஷித்த நோக்கத்திற்காக இதைக் கொடுத்திருக்கிறார். வெறுமையான ஒரு அனுபவமல்ல. ஆதி திருச்சபையின் காலத்தில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கக் கூடாது என்று ஆலோசனைச் சங்கத்தார் அப்போஸ்தலரை பயமுறுத்தினார்கள். அந்த சூழ்நிலையில் தேவ வசனத்தைப் போதிக்க அவர்களுக்கு தைரியம் தேவையாயிருந்தது. இந்த தைரியத்தை அவர்கள் எவ்விதம் பெற்றார்கள் என்று பாருங்கள்? “ பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே பரிசுத்த ஆவியானவரின் நிறைவு அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. தேவன் இவ்விதமாக, தேவையான நேரங்களில் நம்மை தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார்.

 அவ்விதமாகவே பயந்து வேலைக்காரிகளிடம் மறுதலித்த பேதுரு தற்போது எவ்விதம் அதிகாரிகளிடம் பேசுகிறார் பாருங்கள்! பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே…………” (அப் 4:6 – 10). இவ்வளவு தைரியமாய் எப்படி பேதுரு பதிலளிக்க முடிந்தது? பரிசுத்த ஆவியின் நிறைவினால்தான்.

 மேலும் ஸ்தேவான், யூத மதவாதிகாளால் கொல்லப்படுவதற்கு முன்பாக, அந்தப் பயங்கரமான வேளையைக் கடந்து போகவும், தேவனுடைய மகிமையையும் இயேசுவானவரையும் கண்டு நம்பிக்கையோடு நித்தியத்திற்குள் பிரவேசிக்கவும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுகிறார். (அப்., 7:55, 56) இது தான் மெய்யான பரிசுத்த ஆவியானவரின் நிறைவு, வெறுமையாக உணர்ச்சிவசப்பட்டு ஆடுவதும், குதிப்பதும், கைகளைத்தட்டுவதும், பாஷைகள் என்ற பெயரில் சத்தங்கள் எழுப்புவதுமல்ல. பரிசுத்த ஆவியானவரின் நிறைவு நம் தேவைக்கேற்ற பெலத்தைக் கொடுக்கிறது.