கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 25                                 வேறொரு தேற்றரவாளன்               யோவான் 14:9-21

“நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும்

உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு

தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவா 14:16).

          ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் துணையாய் இருப்பதை போன்ற மகிமைகரமான காரியம் வேறொன்றுமில்லை. உன்னை பெலப்படுத்தவும், உன்னை வழிநடத்தவும் இந்த உலகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஈவாகிய பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆகவே தேவ ஆவியானவரை கனப்படுத்துவோம். அவரை நாம் சார்ந்து கொள்ளுவோம். அப்பொழுது நம் வாழ்க்கையில் அவர் நம்மை வழிநடத்துவதை உணர்ந்து கொள்ளுவோம்.

       இன்னுமாக பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் போதித்து உணர்த்துகிறவராக இருக்கிறார். ” என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவ வழிகாட்டியாக ஒருவர் இருப்பது நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு ஒரு நம்பிக்கை. ஆகவேதான் இயேசு கிறிஸ்துவானவர் உங்களை நான் திக்கற்றவர்களாக விடேன் என்று சொல்லியிருக்கிறார். “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவான் 14:18).

       மேலுமாக இயேசுவானவர், “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13) என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் இருக்கும்பொழுது மாத்திரமே சத்தியத்திற்குள் வழிநடத்த முடியும். நம்முடைய சுய வழிகளும், சுய ஞானமும் நம்மை சத்தியத்தை விட்டு வழிவிலக செய்யும். ஆகவே பரிசுத்த ஆவியானவரை நாம் அதிகமாக சார்ந்து பற்றிக்கொள்ளுவோம். அப்பொழுது தேவன் நம்மோடு இருப்பதை உணரமுடியும்.