கிருபை சத்திய தின தியானம்
அக்டோபர் 11 பரிசுத்த ஓய்வுநாள் ஏசாயா 58:1-14
“என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” (ஏசாயா 58:13,14)
இன்று ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் எவ்வளவாய் அலட்சியப் படுத்துகிறார்கள்! ஓய்வு நாளைக்குறித்த ‘கனம்’ மக்கள் மத்தியில் வெகுவாய் அற்றுப்போயிற்று. தேவன் புதிய ஏற்பாட்டில், வாரத்தின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமையை கர்த்தருடைய நாளாக கொடுத்து இருக்கிறார். ஆனால் அநேகர் புதிய ஏற்பாட்டு நாட்களில் நாம் நியாய பிரமாணங்களை பின்பற்றுவதில்லை என்று சொல்லி அந்த நாளைப் புறக்கணிக்கிறார்கள்.
அருமையானவர்களே! புதிய ஏற்பாட்டின் காலத்திலும் தேவனுடைய நீதி மாறிப்போகவில்லை என்பதை மறவாதே. நியாயப்பிரமானம் நமக்கு இல்லை என்று சொல்லி நீ விக்கிரக ஆராதனை செய்வாயா? திருடுவாயா? விபச்சாரம் செய்வாயா? அதனுடைய ஒழுக்க ரீதியான போதனை நமக்கு இன்றும் உண்டு.
ஆனால் இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் அதை கர்த்தருக்குள்ளான மகிழ்சியின் நாளாய், மகிமையின் நாளென்று எண்ணி தேவனை மகிமைப்படுத்துவதில்லை. கர்த்தருடைய நாளில் கலியாணமும், வீட்டு வைபவங்களும், பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் வைத்துக் கொள்ளுகிறார்கள். அநேகர் அந்த நாளில்தான் T V, சீரியல்களும், சினிமாவும் பார்க்கிறார்கள் குடும்பமாய் அதில் உட்கார்ந்து விடுகிறார்கள். அதைக் குறித்து கொஞ்சமாகிலும் குற்ற உணர்வுள்ளவர்களாய் இருப்பதாகவும் தெரியவில்லை. அதில் என்ன தவறு என்று எண்ணுகிறார்கள். அதனால் ஞாயிறு மாலை ஆராதனைக்கு, அநேகருக்கு நேரம் இருந்தும் செல்வது இல்லை. நீ அவ்விதம் கர்த்தருடைய நாளை அசட்டை செய்யும் பொழுது நீ ஆசீர்வாதத்தை இழக்கிறாய். மேலும் உன்மேல் சாபத்தை வருவித்துக் கொள்கிறாய்.நமக்கு ஆவிக்குரிய ஜாக்கிரதை தேவை.