கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 28                              பரிசுத்த தேவன்                           நியா 6:12–22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு:

ஐயோ, கர்த்தரான  ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை

முகமுகமாய்க் கண்டேனே என்றான்” (நியா 6:22).

     கிதியோன் தன்னுடைய வாழ்க்கையில் இவ்விதமான ஒரு அனுபவத்தை ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை. வாழ்க்கையில் சோர்ந்துப்போய், தேவன் பேரில் இருந்த விசுவாசம் தளர்ந்து போயிருந்த நேரத்தில், கர்த்தர் இவ்விதம் அவனுக்கு வெளிப்பட்டார். கர்த்தருடைய தூதனைக் கண்ட கிதியோன் தன் அபாத்திர நிலையை உணர்ந்தான். நீ தேவனுடைய வார்த்தையில் தேவனுடைய பரிசுத்தத்தைக் காணும்போது உண்மையிலேயே அவ்விதம் உணரமுடிகிறதா? மெய்விசுவாசி, அவருக்கு முன்பாகத் தானும் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்ற உணர்வோடு வாழுவான். அவனுடைய உள்ளத்தில் தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்த பயபக்தி இல்லாமல் வாழமுடியாது. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும்  உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.’ (1பேதுரு1:15) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

     இன்றைக்கு தேவனுடைய பரிசுத்தத்தைக்குறித்த பயம் கிறிஸ்தவர்கள்  மத்தில் காணப்படுவதில்லை. ஊழியர்கள் அநேகர் பரிசுத்த அளவைக் குறித்த பயம் இல்லாதவர்களாய் வாழும்போது, எப்படி அவர்கள் பரிசுத்தத்தைக் குறித்த உணர்வோடு பிரசங்கிப்பார்கள்? எப்படி தேவனின் பரிசுத்தத்தை மக்கள் மத்தியில் உயர்த்தி, பரிசுத்த பாதையில் நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள்? தேவனைக்குறித்த பரிசுத்த பயம் உன்னிடத்தில் உண்டா? ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் பரிசுத்தத்தைக் குறித்து எவ்விதம் கேட்கிறார்? சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள் (ஏசாயா 6:3). அப்பொழுது ஏசாயா எவ்விதம் கதறுகிறார் பாருங்கள். ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றான். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்கமுடியாது. உன்னுடைய வாழ்க்கையில் பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறாயா?