பிப்ரவரி 9          பரிசுத்த வேதம்            ரோமர் 1:1-7

“இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்” (ரோமர் 1:4).

      ‘பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி’. வேதாகமம் எவ்வளவு நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கிறது. ரோமருக்கு பவுல் எழுதும்பொழுது வேதாகமத்தில் சொன்ன இந்த வசனம் நிறைவேறிற்று என்ற நிச்சயத்தை இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறார். மெய்யாலும் வேதாகமம் நாம் நம்பத்தக்க தேவனுடைய வார்த்தை என்பதை நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும். அநேக சமயங்களில் வேதாகமத்தை நாம் நோக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறோம். ஒருவேளை நாம் அந்த ஆழமான உணர்வு கொண்டிராததினால்  வேதத்தை நாம் ஆராய்ந்து நம்முடைய வாழ்க்கையைக் கட்டக்கூடிய செயலில் நாம் குறைவுள்ளவர்களாக இருக்கிறோம். “தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்” (1 பேதுரு 1:11) என்று பேதுரு சொல்லுகிறார்.

      தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து படிப்பது அவசியம். ஆவிக்குரிய உண்மைகளை சத்தியங்களை நாம் அறியாமல் இருப்பதற்குக் காரணம் தேவனுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்ந்து படிப்பதில்லை. “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேதுரு 1:21) என்று வேதத்தைக் குறித்து பேதுரு சாட்சியிடுகிறார். வேதம் மனிதனுடைய வார்த்தை அல்ல. அது தேவனுடைய வார்த்தை, தேவனுடைய சத்தம். பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத புத்தகம். அது இன்றைக்கு நம்முடைய கரத்தில் கர்த்தர் நம்மோடு பேசும்படியாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்து வாழுகிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.