கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 21              அவர் சமூகம்               சங்கீதம் 105:1–11

அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள் (சங்கீதம் 105:4)

    அதாவது தேவனை, அவர் சமூகத்தை எப்பொழுதும் தேடுங்கள். எல்லாக் காலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் தேடுங்கள். உயர்விலும், தாழ்விலும் தேடுங்கள். இன்றைக்கு சிலர் கஷ்டங்கள் வந்தால் மட்டுமே தேவனைத் தேடினால் போதும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது தவறு.

    தேவனை நாம் ஏன் எப்பொழுதும் தேடவேண்டும்? நம்முடைய வாழ்க்கை நிலையற்றது. எந்த விதத்தில் எந்தப் பகுதியிலிருந்து நமக்கு  திடீரென்று சோதனை வருமென்று அறியோம். எந்த விதமான வியாதி நமக்கு வரும் என்பதை அறியோம். ஆகவேதான் சங்கீதக்காரன் எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் என்று சொல்லுகிறார். சமூகத்தை என்று சொல்லும்போது அவருடைய பிரசன்னத்தை, அவருடைய உதவியை, அவருடைய ஞானத்தை , ஒத்தாசையை, தயவைக் குறிக்கிறது. நித்தம் என்று சொல்லும்போது எப்போதும், தினமும், எல்லா நேரத்திலும், எல்லா பொழுதிலும், போக்கிலும் வரத்திலும், ஆரம்பிக்கும்பொழுதும் முடிக்கும்பொழுதும் என்று சொல்லலாம்.

    அந்த சங்கீதக்காரன் அடுத்த பகுதியில் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்புகளையும் நினைவு கூறுங்கள்‘ (சங்105:6) என்று சொல்லுகிறார். அவருடைய சமூகத்தை நித்தம் தேடுகிற மனிதன், எப்போதும் தனக்கு தேவன் கடந்த நாட்களில் செய்த நன்மைகளை நினைவுகூறுவான். தேவன் எத்தனை வேளைகளில் உன் இக்கட்டான நிலைகளில் ஆச்சரியமாக காத்து வழிநடத்தி வந்திருக்கிறார்! ஆனால் நீ அதை நினைவுகூறுவதில்லை. அதை நினைவுகூர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதில்லை. நீ நன்றியுள்ள இருதயத்தைக் கொண்டிரு. அவர்  செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. நன்றியில்லாத இருதயம் கடினப்பட்ட இருதயம்.  நாம் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படி ஏற்ப்படுத்தப்பட்ட பாத்திரங்களென்று வேதம் சொல்லுகிறது. நீ அப்படி இருக்கிறாயா? அவருடைய சமூகத்தைத் தேடுகிறவன் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. கல் உணர்ச்சியற்ற ஒரு ஜடப் பொருள். அனால்   நாம்   அப்படியல்ல.