ஜூன் 19     

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15).

      ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் அன்பாயிருப்பது போல இந்த உலகத்தில் மேன்மையான காரியம் ஒன்றுமில்லை. இந்த உலகத்தின் பேரில் அன்பு கூறுபவர்களுக்கு எப்பொழுதும் வருத்தமும் சஞ்சலமுமே. முடிவில்லாத கவலைகளும், வருத்தங்களும், பாடுகளுமே மீதி. ஆனால் நாம் கர்த்தரிடத்தில் அன்பு கூரும்பொழுது, நம் வாழ்க்கையில் என்ன கிடைக்கும்? இயேசுவில் அன்பு கூறும்பொழுது மெய்யான சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.

      அப்படியானால், நாம் எப்படி அவரில் அன்பு கூருவது? “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10) என்று இயேசு சொல்லுகிறார். ஆம்! இயேசுகிறிஸ்து எவ்வாறு பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறாரோ, அதுபோல நாமும் இயேசுகிறிஸ்துவின் கற்பனையைக் கைக்கொண்டு அதன்படி செய்வதே நாம் அவருடைய அன்பில் நிலைத்திருப்பதாகும்.

      அப்படியானால் இயேசுகிறிஸ்துவின் கற்பனை எது? “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிது” (யோவான் 15:12). நாம் ஒருவரில் ஒருவர் அன்புகூருவதே இயேசுவின் பிரதானக் கற்பனையாக இருக்கிறது. இவ்விதம் நாம் அன்புகூரும்பொழுது நமக்கு கிடைக்கும் பலன் என்ன? “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11). ஆம்! நிச்சயமாக நாம் பிறரிடத்தில் அன்புகூரும்பொழுது இயேசுவினிடத்தில் அன்பு கூருகிறோம். அப்பொழுது இயேசுகிறிஸ்து நம்மில் அன்புகூருகிறார். அதினால் மெய்யான சந்தோஷமும், சமாதானமும் நமக்கு கிடைக்கும்.