பிப்ரவரி 8         உயர்ந்த அடைக்கலம்             ஏசாயா 33:16-32

“அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்” (ஏசாயா 33:16).

      ஆண்டவர் தம் பிள்ளைகளைக் குறித்து செல்லும்பொழுது அவர்கள் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவார்கள் என்று சொல்லுகிறார். மெய்யாலும் தேவனுடைய பிள்ளைகள் இந்த உலக மனிதர்களைப்போல வாழும்படியாக அழைக்கப்படவில்லை. அவர்கள் மேலான அழைப்பைப் பெற்றவர்கள். மேலான நோக்கத்திற்காக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அவர்கள் மேலான குறிக்கோளோடு வாழுகிறவர்கள்.  உலகமக்கள் இந்த உலகத்துக்குரிய காரியங்களில் தங்களுடைய அனைத்தையுமே ஈடுபடுத்தி செயல்படுகிறவர்கள். ஆனால் தேவனுடைய பிள்ளைகள் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிறவர்களாக இருப்பார்கள் என்று பவுல் சொல்லுகிறார் (2கொரி 4:17-18). அவர்கள் உன்னதமான அடைக்கலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். தேவனுடைய சமூகத்தில் அவருடைய மகிமையில் தங்களுடைய அடைக்கலத்தைத் தேடுகிறவர்களாய் காணப்படுவார்கள். அவர்கள் நிறைவான ஒரு வாழ்க்கைக்குள் வாழ்கிறவர்களாகக் காணப்படுவார்கள்.

      “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங்கீதம் 91:1) என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய அடைக்கலத்தில் அவருடைய நிழலில் அவன் தங்குகிறவானாகக் காணப்படுவான். மேலும் தேவனுடைய பிள்ளைகள் எப்படிப்பட்டவர்கள் என்று சங்கீதக்காரன், “எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங்கீதம் 91:9-10) என்று சொல்லுகிறார். ஆகவே தேவ ஜனங்களுக்கு ஒரே ஒரு அடைக்கலம் உண்டு. அது தேவன் மாத்திரமே. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் உயர்ந்த அடைக்கலத்தைத் தெரிந்து கொண்டவர்கள். அவர்கள் இந்த உலகத்தின் அளவுகளில் வாழ்கிறவர்கள் அல்ல.