கிருபை சத்திய தின தியானம்

மே 9                     பிரதான ஆசாரியர்                எபி 4 : 10 – 16

“நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத

பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,

பாவமில்லதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரேயர் 4 : 15)

     இயேசு அநேக சமயங்களில் நம்முடைய சோதனைகளில், கஷ்டங்களில் தடுமாறும்போது நம்மைப் பார்த்து பரிதாப உணர்வு கொள்ளுகிறார். அது மாத்திரமல்ல, நம்முடைய உணர்வுகளை, முடியாமைகளை, இயலாமைகளைப் பார்த்து அவர் இரக்கங்கொள்ளுகிறார். மேலும் எல்லாவிததிலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டார். நம்முடைய சோதனைகள் பலவிதம். அதே விதமாக தேவக்குமாரனும் நாம் கடந்து செல்லுகிற பலவிதமான சோதனைகளையும் சந்தித்து, கடந்து சென்றிருக்கிறார். அதை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் அது உண்மையாக இருக்கிறது. அவர் எவ்வளவாக நம்மை உருக்கமான இரக்கத்தோடு காண்கிற தேவனாய் இருக்கிறார்.

      இந்த வசனத்தின் அடிப்படையில் அடுத்த வசனம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே தான் ‘ஆதலால்’ என்று இந்த வசனம் ஆரம்பிக்கிறது. ‘ஆதலால் நாம் இரக்கத்தைப்பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். ‘ ‘(எபி 4 : 16) அன்பானவர்களே! நம்முடைய சோதனை வேளையில் நமக்கு இரக்கம் தேவையல்லவா? மனிதனின் இரக்கம் வெறும் வார்த்தையில்தான் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவில்தான். ஆனால், தேவனாகிய கர்த்தருடைய இரக்கமோ உன்னதமானது, மேன்மையானது, நிச்சயமானது. இந்த இரக்கத்தைப்பெற நாம் எங்கு செல்லவேண்டும்? தேவனுடைய கிருபாசனத்த்யண்டையிலே செல்லுவோமாக. அவருடைய எல்லையில்லாத கிருபையைப் பெறும்படியாக அவரிடத்தில் செல்லுவோமாக. அங்கு எப்படிச் செல்லவேண்டும் என்பதைப்பற்றி 14 , 16ம் வசனங்களில் பார்க்கிறோம். உறுதியுள்ளவர்களாய், தைரியத்தோடே செல்லக்கடவோம். அப்பொழுது நம்மேல் மனதுருகுகிற கர்த்தர் நமக்காகச்  செயல்படுவார். சோதனைகளில் வெற்றியைக் கட்டளையிடுவார்.