செப்டம்பர் 12            

‘எசேக்கியா ஸ்தனாதிபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்தபின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து.’ (2 இராஜாக்கள் 19:14)

யூதர்களின் ராஜாவாகிய  எசேக்கியா தேவன் பேரில் விசுவாசமுள்ளவனாயிருந்தான். அவனைக்குறித்து ‘அவன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவனுக்கு எதிராக அசீரியா ராஜா எழும்பி அவனுடைய தளபதிகளை பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான். அவர்கள் தேவனை நிந்தித்து, எசேக்கியா ராஜாவை பயமுறுத்தினார்கள். அப்பொழுது எசேக்கியா ராஜா ஏசாயா தீர்க்கத்தரிசியினிடத்தில் ஆள் அனுப்பினான். அதோடு நின்றுவிடாமல் கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்று ஜெபித்தான்.

தனக்கு மிஞ்சி ஏற்பட்ட பலத்த சோதனை வேளையில் எசேக்கியா ராஜா, தேவனுடைய மக்களின் ஜெபத்தை நாடினான். ஆனால் அதோடு நின்று விடாமல் தேவனுடைய ஆலயத்தைத் தேடிப்போனான். மற்ற ராஜாக்களை அல்ல. நாம் நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய சமூகத்தைத் தேடவேண்டும். இது மிக முக்கியமானது. அநேகர் தங்களின் இக்கட்டான வேளையில் இவ்விதம் தேவனிடத்தில் செல்லாததால் தேவனுடைய விடுதலையை அவர்கள் காணமுடிவதில்லை.

 அசீரிய ராஜா அந்த நாட்களில் பெரிய சாம்ராஜ்யத்தின் ராஜாவாக இருந்தான். அநேக வெற்றிகளைக் கண்டவன். அவனுடைய சேனையோ மகா பெரியது. அதற்கு முன்னால் எசேக்கியா ராஜாவும் அவன் சேனையும் எம்மாத்திரம்? ஆனால் தேவனுடைய மக்களுக்கு எதிராக எழும்பின வேளையில் என்னவாயிற்று என்று பாருங்கள். ‘கர்த்தருடைய தூதன் புறப்பட்டு அசீரியரின் பாளையத்தில் லட்சதெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.’ (2 இராஜா 19:35 ) கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்தார். எசேக்கியா ராஜா இருதயத்தை ஊற்றி கர்த்தரிடத்தில் ஜெபித்தது வீணல்ல. நாமும் இக்கட்டு நேரத்தில் தேவனிடத்தில் செல்வோமாக.