கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர் 7 சகாயர் எபிரேயர் 13:1-8
‘கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன்’ (எபி 13:6)
அதாவது கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர், நான் பயப்படேன். எல்லா நேரத்திலும் எனக்கு அவர் சகாயராய் இருக்கிறார். கர்த்தர் எனக்கு சகாயர் என்று விசுவாசிக்கிற விசுவாசம் பயத்தை புறம்பே தள்ளும். கோடானகோடி தேவனுடைய பரிசுத்தவான்கள் தேவனை அவர்களுடைய சகாயராகக் கண்டிருக்கிறார்கள். உனக்கும் அவ்விதமாகவே இருப்பார். உனக்கு உதவி தேவை என்று அறிகிற வேளையில் அவரை நோக்கிப்பார். சங்கீதகாரனைப் போல ‘நீரே எனக்கு சகாயர், என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்‘ என்று ஜெபி. தேவன் அனுகூலமான துணையாய் இருந்து உதவி செய்வார்.
உன்னை பயம் பற்றிக்கொள்ளுகிற நேரத்தில் ஒன்றை அறிந்து கொள். விசுவாசம் இல்லாத இடத்தில் பயம் வரும். நீ பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பாயானால், அவிசுவாசத்தினாலும் பீடிக்கப்பட்டிருப்பாய் என்று அர்த்தம். மெய் விசுவாசம் பயத்தை புறம்பே தள்ளும். பயம் உன்னை அலைகழிக்கும் பொழுது அவிசுவாசம் உன்னை ஆட்க்கொண்டிருக்கிறது என்று அறிந்து தேவனிடத்தில் கதறி ஜெபி. தேவனே நீர் என் சகாயர், நான் ஏன் பயப்படவேண்டும்? பயம் உமக்குரியதல்ல. உம்மை நம்பமுடியாதிருக்கிற அவிசுவாசத்தை எனக்கு மன்னித்து உம்மை முழுமையாய் சார்ந்து கொள்ள எனக்கு கிருபை செய்யும்.
இன்னுமாய் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே‘ (சங் 10:14) என்று சொல்லியிருக்கிறீரே. நான் திக்கற்றவன், எனக்கு உம்மைத் தவிர வேறொரு தகப்பன் இல்லை, எனக்கு இரங்கும். நீர் சொல்லுகிறவர் மட்டுமல்ல அதைச் செய்கிறவர் என்று அறிக்கையிடுகிறேன் என்று ஜெபி. அப்பொழுது நீ, இதோ தேவன் எனக்கு சகாயர், ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார் (சங் 54:4) என்று சொல்லுவாய். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு தேவையிலும் மெய் சகாயரை நாம் நோக்கிப்பார்க்க நம்மை வழிநடத்தட்டும். பிசாசு தேவைகளின் நேரத்தில் உன்னை சோர்ந்துபோகச் செய்யப் பார்ப்பான். அவனுக்கு இடங்கொடாதே. சகாயரை நோக்கிப் பார். வெட்கப்படாய்.