கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 11               பரம வாசஸ்தலம்             2 கொரி  5:1-9

‘ஏனெனில், இந்த கூடாரத்தில் நாம் தவித்து,

நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள

மிகவும் வாஞ்சையுள்ள வர்களாயிருக்கிறோம்’ (2கொரி 5:2)

 

         ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையைப் பவுல் இங்கு சித்தரிப்பதைப் பார்க்கிறோம். இங்கு கூடாரம் என்று சொல்லப்படுவது நம் வாழ்க்கையைக் குறிக்கிறது. இதில் நாம் தவிக்கிறோம். நம்முடைய பாவ சுபாவத்திலான மனது, நம்மை மேற்கொள்ள தீவிரிக்கிறது. ‘நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?’ (ரோமர் 7:24) என்று பவுலைப் போல அநேக சமயங்களில் கதறுகிறோம். இந்த உலகம் நிலையானதல்ல என்பதை எப்பொழுதும் ஒரு கிறிஸ்தவன் உணர்ந்தவனாகக் காணப்படுவான். ஆகவேதான் இங்கு பவுல்: ‘நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்’ என்று சொல்லுகிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த உலகத்தின் பாடுகள், உபவத்திரவங்களை விட்டு பரலோக ராஜ்ஜியத்தை சென்றடையும்படியான ஒரு எதிர்ப்பார்ப்பும், அதனுடைய நம்பிக்கையும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

        ‘அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?’ (1 கொரி 13:53–54). ஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது ஜெயமாகும். அவன் மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டான். அவ்விதமான மகிழ்ச்சி என்பது மிகவும் வித்தியாசமானது. அன்பானவர்களே! உங்களுடைய வாழ்க்கை இந்த உலகத்தோடு ஒட்டிக் காணப்படுகிறதா? அல்லது பரலோகத்தை கிட்டிச் சேரும்படி காணப்படுகின்றதா? உலகத்தோடு ஒட்டிய வாழ்கை என்பது நிர்ப்பந்தமானது. பரலோகத்தை ஒட்டிக் காணப்படுகின்ற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது. உன்னை நீயே ஆராய்ந்து பார்.