கிருபை சத்திய தின தியானம்

ஜுலை 15                      பரம அழைப்பு                 பிலி 3 : 1 – 15

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின்

பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்’ (பிலிப்பியர் 3: 14)

            கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு ஆவிக்குரிய ஓட்டம். நீ அதில் அடையும்படியான குறிக்கோளும், இலக்கும்  உண்டு. மேலும், பவுல் நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் என்றும், தன்னுடைய ஓட்டத்தைக்குறித்து நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன் என்றும் சொல்லுகிறார்.’ (கொரிந்  9 : 24, 26 ). எப்படியாகிலும் ஓட்டத்தில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று ஓடுகிறவன் எப்படி ஓடுவான் என்று எண்ணிப்பாருங்கள். அதற்காக எவ்வளவு பயிற்சி அவனுக்கு தேவை. அவன் எத்தனை மணிநேரங்கள் ஒவ்வொருநாளும் பயிற்சிக்காக செலவு செய்வான்.  அவனுடைய ஆகாரத்திலும், வாழ்க்கை முறையிலும் எவ்வளவு கட்டுப்பாடுள்ளவனாக இருப்பான். இந்த ஆவிக்குரிய ஓட்டத்தில் பெறப்போகிறது அற்பமானதல்ல. அது இந்த உலகத்தில் எங்கும் பெறமுடியாதது. அதின் மேன்மை, மகத்துவம் மிகப்பெரியது. அது என்ன? ‘அழிவில்லாத ஜீவகிரீடம்’. அதைப்பார்க்கும்போது மற்றவைகள் எல்லாம் குப்பையே.

            அன்பானவர்களே! உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து இவ்விதமான உணர்வோடு நீங்கள் வாழவில்லையென்றால் நீங்கள் உண்மையில் மெய் கிறிஸ்தவனாக வாழமுடியாது. உன்னில் வாசமாயிருக்கும் தேவ ஆவியானவர் உன்னைக் குறித்தும் உன் ஆவிக்குரியவைகளைக்குறித்தும் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார் என்பதை நீ அறியாயோ? இன்றைக்கு அநேகருக்கு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கடைசியான ஒன்றாய் இருக்கிறது. நீ இந்த உலகத்திற்கும் உலகக்காரியங்களுக்கும் எவ்வளவு  முக்கியத்துவம் கொடுக்கிறாய்! ஆனால் ஆவிக்குரிய காரியங்கள் என்பது உனக்குக் கடைசியானதாய் இருக்கிறது. அன்பான சகோதரனே! சகோதரியே! அப்படி நீ இருப்பாயானால் நீ ஒருவேளை இரட்சிக்கப்படாமல் இருக்கலாம். நீ உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து சிந்தித்துச் செயல்படு. நீ எல்லாவற்றிலும் செய்யவேண்டிய முதலாவது காரியம் உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைச் செப்பனிடுவதுதான்.