‘பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே’ (எபி 3: 1)

     யூத மதத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதின நிரூபம் இது. இந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட்டுவிடுவது போல காணப்பட்ட சூழ்நிலையில்தான், இந்த கடிதம் அவர்களுக்கு எழுதப்பட்டது. அவர்கள் அழைக்கப்பட்ட அழைப்பைக்குறித்து இங்குச் சொல்லப்படுகிறது. இந்த அழைப்பு சாதாரண அழைப்பல்ல, பரம அழைப்பு, நித்தியமான அழைப்பு. இது மனிதனாலல்ல தேவாதி தேவனால் கொடுக்கப்பட்ட அழைப்பு.

     இந்த உலகத்தில் நாம் வாழும்போது பல நெருக்கங்களின் வழியாக கடந்துச் செல்லுகிறோம். இவைகளில் உலகத்தின் பல காரியங்கள், அதாவது குறைவுகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், வியாதிகள் அனைத்தும் அடங்கும். இவ்விதமான வாழ்க்கையின் அநேகப் போராட்டங்கள் மத்தியில் ஒரு கிறிஸ்தவன் தன் அழைப்பை மறந்து வாழக்கூடாது. இந்த உலகம், மாம்சம், பிசாசு, நம்மை பின்னிட்டு இழுக்கும். இவைகளின் மத்தியில்தான் இந்த அழைப்பில் நாம் முன்னேறிச் செல்லவேண்டும். ‘தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை’ (எபேசியர் 1: 18) என்று சொல்லப்படுகிறது. இந்த அழைப்பைக் கொடுக்கிறவர் யார் என்ற ஆழமான உணர்வைப் பெற்றிருப்போமானால் அதின் மேன்மையை உண்மையாலுமே உணருவோம். அவரே நம்மை அழைத்ததினால் இந்த அழைப்பிற்கு கீழ்படியும்படியான பெலத்தையும் அவர் நமக்குக் கொடுக்கிறார். அந்த அழைப்பில் தொடரவும், முடிக்கவும் நம்மை பெலப்படுத்துகிறார்.

     ஆகவே பவுல் நம்முடைய வாழ்க்கையில் எப்படி நடக்கவேண்டும் என்று கூறுகிறார். ‘நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடவுங்கள்’ நாம் பவுலைப்  போல இந்த பரிசுத்த அழைப்பின் மேண்மையையும் மகத்துவத்தையும் உணர்ந்து ஒவ்வொரு நாளும் இதற்கு ஏற்றவர்களாய், பாத்திரவான்களாய் நடப்போம். நாம் தளராமல் ஓடுவோமானால் இந்த ஓட்டத்தின் முடிவில் நமக்கு இளைப்பாறுதலும், ஜீவகிரீடமும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.