“கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது” ஒபதியா 1:3

      இந்த வார்த்தைகள் வருத்தத்துக்குரிய ஒரு வார்த்தை என்பது உண்மை. நாம் மோசம் போவோமானால் அது எவ்வளவு பரிதாபமான நிலை. ஒருவரும் தான் மோசம் போக வேண்டும் என்பதாக வாழுவது கிடையாது. ஆனால் இந்த இடத்தில் தேவனுடைய வார்த்தை, மோசம் போவதற்கு காரணம் மற்றவர்கள் அல்ல, சொந்த இருதயமே நம்மை மோசம் போக்கும் என்று சொல்கிறது.  “அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்” (நீதிமொழிகள் 18:12). இவ்விதமான குணங்களுடன் வாழும் மனிதனின் வாழ்க்கையானது கசப்பானது. அவைகள் ஆண்டவருக்கு முன்பாக அருவருப்பானவைகள். தேவன் இவ்விதமான மனநிலையோடு வாழும் மனிதனைப் பார்த்து மிகவும் கடினமாய்ப் பேசுகிறார். “நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஒபதியா 1:4). மனிதன் தன் முயற்சியினால் உயர்த்திக்கொள்ளும் பொழுது ஒருநாள் கீழே விழுவான். ஆனால் தேவன் நம்மை உயர்த்தும் பொழுது அது மகிமையான ஒன்றாக இருக்கும். அது எப்பொழுதும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். ஆனால் நம்மை நாமே உயர்த்திக் கொள்வது தேவனுக்கு விரோதமாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். “ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்” (மல்கியா 1:4).  நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்கு விரோதமான காரியங்களைச் செய்யக் கூடாது. நம்மை தாழ்த்தும்பொழுது தேவன் நம் வாழ்க்கையை உயர்த்துவார். அது ஆசீர்வாதமாக இருக்கும்.