கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 7                       போதுமென்ற மனது                     1 தீமோ 6 : 1 – 12

“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (1 தீமோ 6:6)

     போதுமென்கிற மனது தேவன் கொடுக்கும் மிக பெரிய பொக்கிஷம். மெய்யான கிறிஸ்தவன் இதை நிச்சயமாக வாஞ்சிப்பான். பொதுவாக மனிதன் போதுமென்கிற மனதற்றவனாய் இன்றைக்கு அலசடிப்படுகின்றான். திருப்தியற்ற இருதயம் உள்ளவனாய் வாழுகிறான். இதினிமித்தம் அவர்களோ பலவிதமான பிரச்சனைகளிலும் நெருக்கங்களிலும் அகப்படுகிறார்கள். போதுமென்ற மனதில்லாத இடத்தில் மெய்யான தேவ பக்தியைப் பார்க்கமுடியாது. அவர்கள் பணம், பொருள், பாவ இச்சைகள் எல்லவற்றிலும் எனக்கு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இரவு பகலாக திருப்தியற்ற நிலைமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    நீதி 15:16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதிக பொருள் அதிக சஞ்சலம். தேவைகளுக்கு ஏற்றவண்ணம் தேவன் நமக்கு கொடுப்பதாக வாக்குபண்ணியிருக்கிறார். ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். ஆனால் மேலும் மேலும் எனக்குத் தேவை என்று போகும் போது உனக்குச் சஞ்சலம் வருத்தமே மிஞ்சும். திருப்தியற்ற தன்மையோடு கவலையும் கூடும்.

     யோவான்ஸ்நானகன் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தபோது போர்ச்சேவகர் அவனை நோக்கி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன் நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும், பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள். (லூக் 3:14). ஆனால் இன்று கிறிஸ்தவன் என்று பெயரை வைத்துக்கொண்டு, சம்பளத்தோடு லஞ்சம் வாங்குகிறவர்களும், எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதாது என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.(எபி 13:5). மெய்யான விசுவாசத்தில் போதுமென்ற மனது உண்டு.