கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 9                  ஞான இருதயம்                    சங் 90:1-12

“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை

எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 90:12 )

     தேவ மனிதனாகிய மோசே, தேவனை நோக்கி இவ்விதமான ஜெபத்தை ஏறெடுக்கிறான். மற்ற தேவ மனிதர்கள் பெறாத உன்னத சிலாக்கியங்களைப் பெற்றான் மோசே. தேவனுடைய மகத்துவமான அற்புதங்களையும் கண்டவர். தேவனுடைய பர்வதத்தில் ஏறி நாற்பது நாட்கள் தேவனோடு வாசம் பண்ணின மனிதன். அந்த 40 நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அவ்விதமான மனிதன் தனக்கு ஞான இருதயம் வேண்டும் என்று வாஞ்சித்து தேவனை நோக்கி ஜெபிக்கிறார் அருமையான நண்பரே! ஆவிக்குரிய ஞானமுள்ள இருதயம் நமக்குத் தேவை. இன்றைக்கு உலக ஞானம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் தேவ ஞானமற்ற மனிதன் பிரயோஜனமற்றவன். அழிந்துப்போகிற ஞானத்தால் நித்திய ஜீவனை பெறமுடியாது.

    இவ்விதமான ஞானமுள்ள இருதயத்தைப் பெற தங்களுக்கு நாட்களை எண்ணும் அறிவைப் போதிக்கும்படி மோசே கேட்கிறார்.  நம் நாட்கள் இந்த பூமியில் எவ்வளவு நிலையற்றது. நித்தியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உலக நாட்கள் இம்மையிலும் அற்பமானதாக இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக மனுஷன் எவ்வளவாய் அதையும் இதையும் சாதித்து உலகத்தின் மேன்மைக்காகப் பாடுபடுகிறான்.

    மேலும் மோசே எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது. ஒரு கதையைப் போல எங்கள் வருஷங்களைக் கழித்துப் போட்டோம். எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பதுவருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே. அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது. நாங்களும் பறந்து போகிறோம். மேலும் மோசே ஒரு அழகான ஜெபம் செய்கிறார். அது நம்முடைய ஜெபமாக இருக்கட்டும். தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்சியாக்கும்.’ (சங் 90:9,10,15)