ஏப்ரல் 16   

“மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்” (சங்கீதம் 66:19).

      எவ்வளவு ஒரு ஆசீர்வாதமான நம்பிக்கை இது. நாம் அநேக சமயங்களில் ஜெபிக்கிறோம் ஆனாலும் நாம்  தேவன் ஜெபத்திற்கு பதில் அளிப்பார் என்று எண்ணாமல் அநேக வேளைகளில்  பயத்தோடும், கலக்கத்தோடும் காணப்படுகிறோம். ஆனால் சங்கீதக்காரன் உறுதியான இந்த விசுவாசத்தை வெளிப்படுத்தி தேவன் ஜெபத்தை கேட்டு பதிலளிப்பார். அதில் சந்தேகமில்லை என்று அறிக்கையிடுகிறார். அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன் என்பதை வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. ஆகவே நாம் ஜெபிப்பதை விட்டுவிடாமல், அந்த ஜெபத்திற்கு பதில் கிடைக்குமா இல்லையா என்று அவிசுவாசப்படாமல்,  விசுவாசத்தோடு ஜெபத்தில் தேவனைச் சேரக்கடவோம். ஒருவேளை நமக்கு அவிசுவாசமான பயமும், சிந்தனைகளும் வந்தாலும், ஆண்டவரே என் அவிசுவாசத்தை மன்னியும் என்று சொல்லி மன்றாடுவோம். நிச்சயமாக ஆண்டவர் நம்முடைய ஜெபத்திற்கு பதில் அளிப்பார்.

“கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்” (சங்கீதம் 6:9) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் நம்முடைய ஜெபத்தைக் குறித்த காரியத்தை அறிக்கை செய்வோம். நம்முடைய வாயினாலும், நாவினாலும் நாம் அறிக்கை செய்யும்படியாக நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவோம். மேலுமாக “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.  அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்” (சங்கீதம் 116:1-2). என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். நாம் விசுவாசத்தோடு ஜெபிப்பதை விட்டுவிடாமல் ஜெபத்திற்கு பதில் அளிப்பார் என்று உறுதியாக இருப்போம். கர்த்தர் நிச்சயம் நமக்கு பதில் கொடுப்பார்.