கிருபை சத்திய தின தியானம்

ஜூல 6    ஆரோக்கியமான பேச்சு       தீத்து 2 ; 1 -= 15

’நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு’ (தீத்து 2 : 1 )

            அநேக ஆலயத்தில் ஆராதனையில்  கலந்து கொண்டு வெளியே வந்தவுடன் உலகத்திற்கடுத்த காரியங்களைப் பேசிக்கொண்டிருப்பார்கள். இது என்னத்தைக்காட்டுகிறது? அவர்கள் அந்த ஆராதனையில் கேட்ட தேவ வார்த்தை, அவர்கள் இருதயத்தைச் சந்திக்கவில்லையென்பதைக் காட்டுகிறது. அவர்கள் ஆலயத்தில் நுழையும்பொழுதும் இன்று கர்த்தர் என்னோடு பேசுவார் என்று எதிர்பார்த்து ஜெபிப்பதில்லை. ஆகவே ஆலயத்தை விட்டு போகும் போதும் வெறுமையாகவே திரும்புகிறார்கள். அன்பானவர்களே! ஒவ்வொரு ஓய்வு நாளிலும் உங்கள் நிலை அவ்விதமாகத்தான் இருக்கிறாதா? இனிமேலும் அவ்விதம் இருக்காதீர்கள். நாம் விசுவாசிக்கிற தேவன் ஜீவனுள்ளவர். நம்மோடு இடைப்படுகிறார், பேசுகிறார், இவ்விதமாக, தேவனுடைய சபையாக நாம் கூடி வருகையில் தேவன் நம்மத்தியில் இருப்பேன் என்று வாக்குபண்ணியிருக்கிறார். ஆகவே எப்போது ஆலயத்திற்குச் சென்றாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போதும் ‘கர்த்தாவே என்னோடு பேசும்’ என்று ஜெபி. தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டு உன்னோடே பேசுவார்.

            உன்னுடைய பேச்சைக்குறித்து நீ அதிகம் எச்சரிக்கையாயிரு. உன்னுடைய பேச்சு  எப்போதும் தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாயிருக்கவேண்டும். சிலர் வீண் வார்த்தைகளைப் பேசி, காலத்தைக் கழிப்பதில் திறமைவாய்ந்தவர்கள். அதினால் ஒரு பிரயோஜனமுமிருக்காது. தேவனுடைய வார்த்தை இவ்விதமாகவும் எச்சரிக்கிறது. ‘மிகுதியான சொற்களினால் பாவமில்லாமல் போகாது.

            தீத்து ஒரு ஊழியகாரனாய், ஒரு பொறுப்புள்ள நிலையில் வைக்கப்பட்டிருந்தான். ஊழியக்காரன், பேசுகிற காரியங்களில், எவைகளைப் பேசுகிறோம் என்பதில் விழிப்பாயிருக்கவேண்டும். அவனுடைய பேச்சு மற்றவர்களுக்கு பிரயோஜனம் உண்டாகத்தக்கதாக காணப்பட வேண்டும். அவனுடைய பேச்சில் ஆரோக்கியமற்ற கேலி, பரியாசங்கள், தரகுறைவான வார்த்தைகள் இருக்கக்கூடாது. உன்னுடைய பேச்சு எவ்விதமாய் இருக்கிறது என்பதை யோசித்துப்பார்.