“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” (சங்கீதம் 91:11).

தேவனுடைய பாதுகாப்பு என்பது வித்தியாசமானது. இன்றைக்கு நாம் பல விதங்களில் மனிதனுடைய பாதுகாப்பைத் தேடுகிறோம். மேலும் நம்மை நாமே சார்ந்து வாழப் பார்க்கிறோம். ஆனால் அது மெய்யான பாதுகாப்பாய் நமக்கு இருக்க முடியுமா? இல்லை. ஒருபோதும் அது நமக்குப் பாதுகாப்பாய் இருக்க முடியாது. நாம் நம்மைச் சார்ந்து வாழவும் முடியாது. நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. மனிதனைச் சார்ந்து வாழுகிற வாழ்க்கை முறையை நாம் விட்டுவிடுவோம். அது நமக்கு ஒருநாளும் ஆசீர்வாதமாக இருப்பதில்லை. தேவனுடைய பாதுகாப்பு என்பது மனிதர்களைப் போல ஒரு பாதுகாப்பு வழிமுறை அல்ல. அவர் தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்று வேதம் சொல்லுகிறது. ஆண்டவருடைய பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது ஒரு அசாதாரணமான ஒரு பாதுகாப்பு. நம்முடைய வாழ்க்கையில் அவரைச் சார்ந்துகொள்ளும்போது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பும் நம்பிக்கையும் உண்டு. நாம் அநேக வேளைகளில் அவருடைய வழியை விட்டு விலகிப் போகிறோம். ஆனால் கிருபையாய் தேவன் நம்மைத் தம்பக்கமாக இழுத்துக்கொள்கிறார். தேவனின்  இந்தப் பாதுகாப்பைக் குறித்து நிச்சயமுள்ளவர்களாய் வாழுவோம். இது வேதம் சொல்லுகிற உண்மை. விசுவாசத்தில் உறுதியாய் இருந்து கர்த்தரை முழுமையாகச் சார்ந்துகொள்ள அவர் நமக்கு உதவி செய்வாராக.