ஜூலை 12
“தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்” (1நாளா 29:12).
தாவீது தான் எழுதின சங்கீதங்களில் மறுபடியும் மறுபடியும் சொல்லும் ஒரு காரியம், தேவன் சர்வத்தையும் ஆளும் சர்வ ஏகாதிபத்திய தேவன். ஒரு மனிதன் எந்த அளவுக்கு, தேவன் சர்வத்தையும் ஆளும் தேவாதி தேவன் என்பதை விளங்கிகொள்ளுகிறானோ, அந்த அளவுக்கு அவன் அவரை உயர்த்தவும், தன்னைத் தாழ்த்தவும் வாஞ்சிப்பான். வேதம் வலியுறுத்தும் உண்மை இது. இதுவே வேதத்தின் மையமான போதனையென்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். “உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை (உபா 4: 39). அவர் தேவாதி தேவனாக ராஜாதி ராஜாவாக ஆளுகை செய்கிறார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார்” (சங் 93:1). கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது (சங் 103:19). அவருடைய ஆளுகைக்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை. நீயும் நானும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவர்கள் தான் என்பதை நினைத்துக்கொள். இவ்விதமான தேவனிடத்தில் நம்மை முற்றிலும் தாழ்த்தி ஒப்புக்கொடுப்பதே நமக்கு மேன்மையைத் தரும். இந்த தேவனின் ஆளுகையின் கீழ்தான் அண்டசராசரங்களும் இருக்கின்றன “வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார் (சங் 135 :6). அவர் செய்ய நினைத்தைத் தடுக்கக்கூடியவன் ஒருவனுமில்லை. “இதோ, அவர் பறித்துக்கொண்டு போகிறார், அவரை மறிப்பவன் யார்? (யோபு 9:12).
அவர் சர்வத்தை மாத்திரமல்ல, உன்னுடைய வாழ்க்கையின் அனைத்தையும் ஆளுகை செய்கிறவர் அவரே. உன் வாழ்க்கையின் எல்லாவற்றையும் நிர்ணயத்திருக்கிறவரும் அவரே. ஆகவே எப்பொழுதும் அதை நீ உணர்ந்து வாழுவாயானால், அது உன் வாழ்க்கையில் பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அவரே சர்வ ஏகாதிபத்திய தேவன் என்கிற சத்தியம் உன் வாழ்க்கைக்கு பெரிய நங்கூரமாயிருக்கும். அன்பானவரே! உன் வாழ்க்கையில் அவ்விதம் மெய்யாய் விசுவாசிக்கமுடிகிறதா? தேவனின் சர்வ ஏகாதிபத்தியம் உனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கட்டும்.