“அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1யோவான் 4:7-8).

மறுபிறப்பின் ஒரு முக்கியமான அடையாளம் அன்பு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மறுபிறப்பு என்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான செயல். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவனை அறிந்திருக்கிற மிக முக்கியமான அம்சம் அன்பு. அன்பில்லாமல் நான் தேவனை அறிந்திருக்கிறேன் என்று சொல்வது வேதத்தின்படி சரியல்ல. பவுல் சொல்லுகிறார் எனக்குள் அன்பில்லை என்றால் நான் ஒன்றுமில்லை என்று. நமக்குள் அன்பு இல்லாதபொழுது தேவனுக்கும் நமக்குமான உறவு சரியாக இருக்க முடியாது. தேவனோடு கொண்டிருக்கும்படியான உறவு மிக முக்கியமானது. அந்த உறவை நாம் காத்துக்கொள்வதற்கு அன்பு மிகத் தேவை. 1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் பவுல் அன்பைக் குறித்தும் மிகத் தெளிவாக விளக்குகிறார். ஒருவன் மறுபடியும் பிறந்திருந்தால் மட்டுமே அவனில் இந்த தெய்வீக அன்பு காணப்பட முடியும். தேவனுடைய அன்பு நம்முடைய வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமானால் நான் நிச்சயமாக ஆண்டவருக்குப் பிரியமாக வாழ முடியாது. ஒருவேளை நாம் ஜெபிக்கலாம், வேதம் வாசிக்கலாம், ஆனாலும் தேவப் பிரசன்னத்தைக் காத்துக்கொண்டு வாழுகிற வாழ்க்கையாக அது இருக்காது. தேவனுடைய மகிழ்ச்சி நம்முடைய வாழ்க்கையில் இருக்காது. தாழ்மை அங்கு இருக்காது. மற்றவர்களை மன்னிக்க முடியாத சுபாவம், பெருமை இப்படிப்பட்டவைகளே காணப்படும். தேவன் என்னை எந்தவிதமான தகுதியின் அடிப்படையில் என்னை நேசிக்கவில்லை. ஆகவே இதை நான் உணரும்போது அவரை நான் நேசிக்கிறேன். அது என் இருதயத்திற்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. என் பாவத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுத்திருப்பார் என்றால் அது அவருடைய அன்பின் பிரதிபிலிப்பு. இவ்விதமாக என்னை நேசித்த அன்பை நான் எவ்விதம் புறக்கணிக்க முடியும்? அநேக வேளைகளில் நாம் தேவனை மெய்யாய் நேசிக்காமல் வெறுமையாக வேதத்தை வாசித்து ஜெபிக்கிறோம். இது மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. நம்முடைய இருதயம் தேவ அன்பினால் நிரப்பப்படுகிறதா? அல்லது பல சூழ்நிலைகளினால் சமாதானம் அற்ற நிலையில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோமா? தேவன் கிறிஸ்துவுக்குள்ளான இந்த அன்பைக் கொண்ட வாழ்க்கையை நமக்குத் தருவாராக.