கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 22              மரித்தாலும் பிழைப்பான்       யோவா 11:18-46

என்னை விசுவாசிக்கிறவன்

மரித்தாலும் பிழைப்பான்‘ (யோவா 11:25)

 

        இது சற்று வித்தியாசமானதாகக் காணப்படுகிறதல்லவா? மரித்தவன் எப்படி விசுவாசிக்கமுடியும்? அவன் ஏற்கனவே மரித்துவிட்டான். அவனில் ஜீவன் எதுவுமே இல்லை. மரித்த இந்த சடலம் விசுவாசித்தால் பிழைக்கும் என்று சொல்வதுபோல் இருக்கிறதல்லவா! இன்றைக்கு அநேகர் அவ்விதமாகவே எண்ணுகிறார்கள், பிரசங்கிக்கிறார்கள். ஆனால் வேதம் சொல்லுகிறது, இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஆத்துமாவில் மரித்தவன். ஆகவே பவுல் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த  உங்களை உயிர்பித்தார்‘ (எபேசி 2:1) என்று எழுதியிருக்கிறார். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் ஆத்தும நிலை இதுதான். தேவனுக்கும் அவனுக்கும் தொடர்பற்ற நிலை, நித்திய தேவ ராஜ்யத்தைப் பற்றி அறியாத நிலை.

  ஆனால், இந்த மரித்த ஆத்துமா பிழைக்கும்படியான வழியை ஆண்டவராகிய இயேசு சொல்லியிருகிறார். ‘விசுவாசிக்கிறவன் பிழைப்பான்’ அப்படியானால் ஆத்துமா பிழைக்கும்படி விசுவாசம் தேவை. விசுவாசம் ஒரு ஆத்துமாவை தேவனோடு இணைக்கிறது. இந்த விசுவாசத்தின்வழியாக ஒரு மனிதன் இரட்சிப்பைப் பெறுகிறான். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது அல்ல(எபேசி 2:8). இந்த இரட்சிப்பை இலவசமாக அருளும் தேவன் விசுவாசத்தையும் நமக்கு ஈவாக நமக்கு கொடுக்கிறார். இரண்டுமே நமக்கு தேவனிடத்திலிருந்து வருகிறது. எவ்வளவு பெரிதான கிருபை  இது. தேவன் ஒரு மனித ஆத்துமாவின் இரட்சிப்பில் அனைத்தையும் அவரே அருளுகிறார். இது இலவசமானது, ஆனால் உன்னதமானது.

    இதுவே ஒரு ஆத்துமாவில் உன்னதமான தேவனின் செயல். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.‘ (பிலிப் 2:13)  உன்னில் ஆவிக்குரிய ஜீவன் உண்டா? அப்பொழுது ஆவியில் பிழைத்திருக்கிற வாழ்க்கை உன்னில் காணப்படும்.