கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 16                      பாதைகளை செவ்வைப்படுத்து                 நீதி 3:1-10

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்,

உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;

அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்;” (நீதி 3:5,6)

     முதலாவது நம்முடைய சுயபுத்தியை பற்றி நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். நீ தேவனை அறியாதிருந்த நாட்களில் இதினால் முற்றிலும் நடத்தப்பட்டு வந்தாய். சுயபுத்தி என்று சொல்லப்படுவது ஆங்கிலத்தில் சுய நம்பிக்கை என்ற பதமாக சொல்லப்படுகிறது. சுயநம்பிக்கையைக்  காட்டிலும் ஒரு கிறிஸ்தவனுக்கு ஆபத்தானது வேறு ஒன்றுமில்லை. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் அப்படி வாழ்வதால் அவர்கள் எப்போதும் தோல்வி அடைகிற கிறிஸ்தவர்களாகவே இருக்கிறார்கள்.

    ஒரு கிறிஸ்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும்.    அரைகுறையான     இருதயத்தோடு அல்ல. முழு மனதோடும்’. ஆவிக்குரிய வாழ்க்கையில்   இது மிக   அவசியமானது. நீ முழு இருதயத்தோடும், முழுமனதோடும்   கர்த்தரில்   நம்பிகையாயிருக்கிறாயா?   பிரிக்கப்பட்ட இருதயத்தோடே  இன்றைக்கு  அநேக  கிறிஸ்தவர்கள்  இருக்கிறார்கள்.

    உன் வழிகளிலெல்லாம் தேவனை அறிந்துகொள், அதாவது அவரை சார்ந்து கொள். அவருடைய வழியை ஏற்றுக்கொள். இது மிக அவசியமானது. இன்று அநேகர் தங்களுடைய வழியை தாங்களாகவே தெரிந்து கொண்டு அதை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்காக அநேக ஊழியர்களிடம் ஜெபிக்கும்படி கடிதங்கள் எழுதுகிறார்கள். உபவாசம் செய்கிறார்கள். ஆனால் உள்ளான மனதில் தங்கள் சுய நம்பிக்கையின் பேரிலேயே இவர்கள் சார்ந்திருக்கிறார்கள்.

எப்பொழுது அவர் உன் பாதையை செவ்வைப்படுத்துவார்? தேவனுடைய அளவுகளின்படி ஜீவிக்கும் பொழுது  தேவன் அவைகளைச் செம்மைப்படுத்துவார். அவைகளில் மெய்யான நன்மையைக் காணமுடியும். கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும் அவ்விதம் உன் வாழ்க்கை அமைந்திருக்கட்டும்.