ஜனவரி 22

“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (1 சாமுவேல் 2:8).

என்ன ஒரு  உன்னதமான மகிமையான காரியத்தைக் கர்த்தர் செய்கிறார்! புழுதியில் சிறியவனாக பாவத்தின் அடிமைதனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனை, கர்த்தரே உயர்த்துகிறார். ஆம் இந்த உலகத்தில் நாம் வாழும்படியான வாழ்க்கை என்பது ஒரு குப்பையில் வாழுகிற வாழ்க்கையைப் போலவே காணப்படுகிறது. பாவத்தின் சேற்றில் நாம் மூழ்கினவர்களாய்க் காணப்படுகிறோம். ஆனால் தேவன் நம்மைப் புழுதியிலிருந்து எடுக்கிறவராக இருக்கிறார். பாவத்தின் ஆளுகை நம்மைப் பாவத்தின் அடிமைகளாகக்கி, அதன் விளைவான பாவத்தின் சாபத்தைச் சுமந்துக்கொண்டிருக்கிற வேளையில், தேவன் தம்முடைய கிருபையினால் நம்மை எடுத்து உயர்த்துகிறார். மேலான நிலைக்கு அவர் நம்மை எடுத்துச்செல்லுகிறார். அதோடுமட்டுமல்லாமல் பிரபுக்களோடும் உட்காரவைக்கிறார். படிப்படியாக தேவன் தம்முடைய பிள்ளைகளை உயர்த்துகிறதை நாம் பார்க்கிறோம். நாம் விசுவாசத்தோடு தேவனைத் தொடர்ந்து சார்ந்து போகும் பொழுது, படிப்படியாக நம்முடைய வாழ்க்கையில் உயர்த்தப்படுகிறோம், மேன்மையடைகிறோம். அடுத்ததாக மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கப் பண்ணுகிறார். இவ்விதமாக தேவன் ஒரு அடிமட்டத்திலிருந்து உயர்ந்த ஸ்தானத்திற்கு ஒரு பாவியை உயர்த்துகிறார் என்பதைப் பார்க்கும்பொழுது, அது அவருடைய அன்பின் மகிமைகரமான செயலேயன்றி வேறொன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் பாவத்தின் உளையான சேறு நம்மை பாவத்தின் அடிமைகளாய்  வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலைக்குள் வைத்திருந்தது. ஆனால் தேவன் நம்மை இவ்விதமாக எடுத்து, உயர்த்தி மகிமையான காரியத்தைச் சுதந்தரிக்கச் செய்யும்பொழுது, நாம் நம்முடைய வாழ்க்கையில் மிக மேன்மைக்குரிய காரியங்களைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக மாத்திரமல்ல, கனத்திற்குரியவர்களாகவும்  காணப்படுவோம். இது மெய்யாலுமே தேவனின் மகிமையான கிருபையின் செயல்.