ஆகஸ்ட் 25         

“கொந்தளிப்பை அமர்த்துகிறர், அதின் அலைகள் அடங்குகிறது” (சங்107:29)

     இதற்கு முந்திய பிந்திய வசனங்களைப் பார்க்கும்போது இது எந்தவிதமான கொந்தளிப்பு என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.  இது சாதாரண கொந்தளிப்பல்ல. கடலின் கொந்தளிப்பு. இந்த உலகில் கடலின் கொந்தளிப்பை யார் அடக்கமுடியும்? அன்பானவர்களே! நமது வாழ்க்கையிலும் கடலின் கொந்தளிப்பைப் போன்றவைகள் எழும்பலாம். யாராலும் அடக்கக்கூடாததைப் போல காணப்படுகின்ற  காரியங்கள் வரலாம். வாழ்க்கைப் பிரயாணத்தில் இவ்விதமான வேளைகள் ஏற்படலாம். ஆனால் நாம் எவ்விதம் இந்த கொந்தளிப்புகளை கடந்து செல்வது? நாம் கொந்தளிப்பை அடக்குகிறவரிடத்தில் செல்லவேண்டும். அவரே அந்த கொந்தளிப்பை அடக்கவல்லவர். அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும். காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகிறதே என்று அறியத்தக்கதாக அதை தம்முடைய வார்த்தையினால் அடக்கியவர்.  அவரிடத்தில் நாம் கொந்தளிப்பை எடுத்துச்செல்லும்போது அவர் அதை எப்படி அமர்த்தவேண்டுமோ  அவ்விதம் செய்வார்.

     அடுத்த வசனத்தை வாசித்துப்பாருங்கள். “அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார்” (சங் 107:3). கொந்தளிப்பு நீங்கி அமைதலுண்டானது என்று பார்க்கிறோம். உங்கள் வாழ்க்கையின் கொந்தளிப்பு எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அமைதலுண்டாகும். தேவன் எல்லா கொந்தளிப்பையும்  அமர்த்துவார். மேலும் அவர்கள் இந்தக் கொந்தளிப்பில் அமிழ்ந்துவிட்டார்கள்  என்று சொல்லப்படவில்லை. அவர்கள் பத்திரமாக துறைமுகத்தை வந்தடைந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர் யார்? ‘தேவனே’ நீங்கள் உங்கள் சொந்த அறிவினால் இதைக் கடந்து செல்லமுடியாது. ஆனால், தேவன் அவ்விதம் செய்வார். துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.