கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட்  30             நீடிய சாந்தமுள்ளவர்          நாகூம் 1:1-15

“கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்” (நாகூம் 1:3)

    இந்த வசனம் இரண்டு வித்தியாசமான தன்மைகளைக் கூறுவதுபோல் இருக்கிறது. இன்றைக்கு இந்த சமுதாயத்தில் நீடிய பொறுமை, நீடிய சாந்தமுள்ள மனிதன் ஒரு ஏமாளியாக, பெலனற்றவனாக எண்ணப்படுகிறான், பார்க்கப்படுகிறான். ஆனால் இது உண்மையா? இல்லை. உடனடியாக கோபப்படுகிறவனே பலவீனன். அவனால் அவனுடைய சொந்தத் தன்மையை, சுபாவத்தை மேற்கொள்ள முடியாதவனாக இருக்கிறான், ஆனால் நீடிய சாந்தமுள்ளவனோ  தன்னுடைய சுபாவத்தை அடக்கக்கூடியவனாக இருக்கிறான். கோபப்படுகிறவன் தன்னுடைய கட்டுபாட்டை இழக்கக்கூடியவனாக இருக்கிறான். ஆனால் நீடிய சாந்தமுள்ளவனோ தன்னை மட்டுமல்ல, அந்த சூழ்நிலையையும் கட்டுப்பாட்டிற்குள்ளாக வைத்துக் கொள்ளக்கூடியவனாக இருக்கிறான். பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன், பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன் (நீதி 16:32).

     நீடிய சாந்தத்தை பலவீனமாக எண்ணாதே. அது ஒரு மனிதனில் காணப்படுகிற வல்லமையான கருவியாய் இருக்கிறது. நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான் (நீதி 15:18). எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அதை அமர்த்துகிற வல்லமை அதற்கு உண்டு. வீட்டில் கணவன், மனைவி உறவாக அது இருக்கலாம் அல்லது மற்றவர்களோடு உள்ள உறவாக இருக்கலாம். எந்தவிதமான உறவாக இருந்தாலும் நீடிய சாந்தம் என்ற கருவியை நீ உபயோகப்படுத்துவதைக் காட்டிலும் வேறு ஒன்றும் இவ்வித சூழ்நிலையை அமர்த்தமுடியாது.

    தேவன் நீடிய சாந்தமுள்ளவர் மாத்திரமல்ல, வல்லமையுள்ளவர். தேவனின் வல்லமையை யார் அளவிட்டுச் சொல்லமுடியும்? வல்லமையும் பயங்கரமுமுள்ள மகாதேவனாகிய எங்கள் தேவனே (நெகேமியா 9:32). இந்த தேவனின் வல்லமைக்கு முன்பாக நிற்பவன் யார்? ஆனாலும் அவருடைய நீடிய சாந்தத்தினிமித்தம் நம்முடைய வாழ்க்கையில் அவர் பொறுமையாய்ச் செயல்படுகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.