கிருபை சத்திய தின தியானம்

ஜூலை  24    நான் போகும் வழியை அறிவார்   யோபு 23 : 1  –17

 

      ‘இதோ நான் முன்னாக போனாலும் அவர் இல்லை; பின்னாக

      போனாலும் அவரை அங்கே காணேன்; இடதுபுறத்தில்அவர்   

     கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான்

    அவர் காணாதபடிக்கு  ஒளித்திருக்கிறார். ஆனாலும்  நான்

    போகும் வழியை அறிவார்‘ (யோபு 23 : 8, 9, 10)

 

              யோபு தன்னுடைய துன்ப நேரத்தில் இதை எழுதுகிறார். தன்னுடைய இந்த சூழ்நிலையில் தேவனைக் கண்டு எல்லாவற்றையும் அவரிடம் சொல்ல யோபு வாஞ்சிக்கிறதை இந்த புஸ்தகத்தில் பார்க்கிறோம். ஆனாலும் அவன் எப்பக்கம் திரும்பினாலும் தேவனை பார்க்க முடியவில்லை. அன்பானவர்களே! ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் யோபுவை போல துன்பத்தின் வழியாய் கடந்து போகலாம். ஆனாலும் தேவன் இவ்விதமான உன் காரியங்களை அவர் அறிய மாட்டார் என்று நினைக்கிறீர்களா? இன்னும் மற்ற பரிசுத்தவான்களும் கூட இவ்விதமான சூழ்நிலையைக் கடந்து சென்றிருக்கிறார்கள். சங்கீதகாரனும், கர்த்தாவே எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?(சங்கீதம் 13:1) என்றான்.

               ஆனாலும், யோபு இதினால் முற்றிலும் சோர்ந்து போகவில்லை. அதன் மத்தியில் தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிறோம். ‘ஆனாலும் நான் போகும் வழியை அறிவார் இதுவே ஒவ்வொரு மெய்கிறிஸ்தவனின் நம்பிக்கை. அவன் எங்கே சென்றுகொண்டிருக்கிறான் என்பதை அறியமுடியாத அளவுக்கு பாதை இருண்டதாக தெரியலாம்.ஆனாலும் ‘தேவன் என் வழியை அறிந்திருக்கிறார். என்னை வழித்தப்பிபோக விடமாட்டார்,’ என்று சொல்லமுடியும்.

   ‘கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார், துன்மார்க்கரின்வழியோ அழியும்‘. அவர் அறியாமல் நமக்கு நேரிடுவது ஒன்றுமில்லை. தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். யோபுவின் நம்பிக்கை வீண்போகவில்லை. யோபை கைவிடாத தேவன், நம்மையும் கைவிடமாட்டார் என்பதில் உறுதியாயிருப்போமாக.