செப்டம்பர் 14
‘தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.’ (நீதி 30:3)
கர்த்தருடைய வசனம், அதன் மேன்மை மகத்துவத்தைக் குறித்து மறுபடியும், மறுபடியுமாக சொல்லுகிறது. தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள். அதாவது சுத்தமானவைகள். மேலும் சங்கீதம் 12ல் 6ம் வசனம் ‘கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.’ தேவனுடைய வார்த்தைகளில் குறை ஒன்றுமில்லை. ஆகவேதான் ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது’ (சங்கீதம் 19 : 7) தேவனுடைய வார்த்தையை நம்புங்கள். அதின் நம்பகத்தன்மையைக்குறித்து உறுதியாயிருங்கள். அதுவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திபாரமாயிருக்கிறது.
மேலும் தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். கேடகம், எதிராளி எய்யும்படியான அம்பு, மற்றும் தாக்கும் ஆயுதங்களுக்கு நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. தேவன் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய சத்துருவின் எல்லாத் தாக்கங்களுக்கும் நம்மைப் பாதுகாக்கிறார். நமது ஆத்துமாவுக்கு எதிரிடையாய் எழும்பும்படியான அனைத்திற்கும் நம்மைப் பதுக்காக்கிறார். தேவன் ஆபிரகாமுக்கு சொன்னார், ‘நீ பயப்படாதே நான் உனக்கு கேடகமும், உனக்கு மகாபெரிய பெலனுமாயிருக்கிறேன்’ (ஆதி., 15 : 1) தேவன் இவ்விதம் சொன்னது, ஆபிரகாமுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் பாருங்கள். தேவாதி தேவன் ஆபிரகாமை அழைத்தவராக மாத்திரமல்ல தொடர்ந்து பாதுகாக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் தேவன், தேவனை அறியாத மக்கள் மத்தியிலிருந்து பிரித்தெடுத்து அழைத்திருக்கிறார். அன்பானவர்களே! தேவன் நமக்கு கேடகமாயிருக்கிறார் என்று சொல்லுங்கள். ‘உனக்கு சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே’, (உபா., 33 : 29) இந்த கேடகம் நமக்கு இருக்கும்பொழுது எந்த எதிரியும் நம்மைத் தாக்கமுடியாது.