ஜனவரி 16

கர்த்தரைத் துதியுங்கள்

“நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது” (சங்கீதம் 147:5).

தேவன் எவ்வளவு பெரிய வல்லமையும் மகத்துவமுமானவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அநேக வேளைகளில் நாம் இதை நினைப்பதில்லை. ஆனால் அவ்விதமாக நாம் நினைக்கும்பொழுது மாத்திரமே நம்முடைய பிரச்சனைகள், நம்முடைய காரியங்கள் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். “கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது” (சங்கீதம் 33:6) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தேவனுடைய வல்லமையான மகத்துவத்தை, மேன்மையை நாம் எப்போதும் நினைத்து அவரைத் துதிப்போமாக. அது அவருக்கு கனமும் மகிமையுமாயிருக்கும். “அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது” (சங்கீதம் 148:5). நாமமும்கூட அவருடைய கரத்தினால் சிருஷ்டிக்கப்பட்டோம். நாம் அவருடைய நாமத்தைத் துதிப்பதை தேவன் எப்போதும் எதிர்பார்க்கிறார். அவரைத் துதிப்பது நல்லது. அவருடைய அன்பையும், கிருபையையும், வல்லமையையும், மகத்துவத்தையும், மேன்மையையும் எண்ணினவர்களாக எப்பொழுதும் அவரைத் துதித்துக்கொண்டே இருப்போமாக. அப்போது அவருக்குரிய கனத்தைச் செலுத்துகிறவர்களாகக் காணப்படுவோம். மேலும் நம்முடைய வாழ்க்கையில் குறைவுகளினால் முறுமுறுக்கிறவர்களாக இல்லாதபடிக்கு, நம்முடைய நாவில் அவருடைய துதியைப் பிரஸ்தாபப்படுகிற கருவிகளாக காணப்படுவோம். அது நம்முடைய ஆத்துமாவுக்கு நல்லது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது இன்னும் பெலன்கொடுக்கிறதாகக் காணப்படும். ஆகவே தேவாதி தேவனை நாம் துதிப்போம். அவருடைய வல்லமையை  உயர்த்திப்பிடிப்போம். அப்பொழுது அவருடைய கிருபையும் மேன்மையும் நம்முடைய வாழ்க்கையில் அதிகமாய்ப் பெருகுகிறதை காணமுடியும்.