கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 6     உன் நடுவில் இருக்கிறார்    செப்பனியா 3 : 10 – 20

’உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூறுவார்.’ (செப்பனியா 3 : 17 )

             தேவனுடைய இந்த வார்த்தை நம்மில் சொல்லப்படுமானால் எவ்வளவு நலமாயிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ’ ’உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்.’ தேவன் நம் வாழ்க்கையின் மையத்தில் இருப்பாரானால் நாம் எதற்கு பயப்படவேண்டும்? தேவனே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுகிறார். ஆம்! ஒரு மெய்கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தேவன் மையமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையில், தேவன் மையமாக இருந்து செயல்படுகிறார் என்பது நிச்சயம். அவர்கள் வாழ்க்கையில் நேரிடுகிற அனைத்தும் தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதே. சகல வாழ்க்கையின் சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் ஆவிக்குரிய நன்மைக்காகவே நடக்கின்றன அல்லது தேவனால் நடத்தப்படுகின்றன அவர் உன் வாழ்க்கையின் மையமாக இருக்கிறாரா?

            ’அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூறுவார்.’ தேவன் நம்பேரில் சந்தோஷமாய் மகிழுவாரானால், களிகூறுவாரானால் அதைக்காட்டிலும் மேலான சிலாக்கியம் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடுமா? ஒரு உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கையின் மேலான நோக்கம் ‘ என் தேவனுக்கு நான் பிரியமாய் வாழவேண்டும்’ என்பதே. ‘நல்லது உத்தமமும் உண்மையுள்ள ஊழியனே’ என்று தேவன் சொல்வதையே எதிர்பார்த்து ஒரு ஊழியன் தேவனுக்கென்று உழைக்கிறான். ‘சோம்பலான ஊழியனே’ என்று சொல்வதை தேவனிடத்திலிருந்து யார் பெற விரும்புவார்கள்? தேவன் வல்லமையுள்ளவர், உண்மையுள்ளவர். அவர் அவ்விதம் உன் வாழ்க்கையை ஆசீர்வதிக்க வல்லவர். தேவனுடைய வாக்குதத்தத்தைப்பற்றிக் கொண்டு ‘ஆண்டவரே என் வாழ்க்கையானது ஆசீர்வதிக்கப்படட்டும்’ என்று ஜெபி. தேவன் அவ்விதமாகவே செய்வார்.