“இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” (லூக்கா 19:9).

சகேயுவின் வாழ்க்கையில் அவனுடைய இந்த தேடுதலும் மாற்றமும் அவனை மாத்திரமல்ல, அவன் வீட்டாரையும் இரட்சிப்பிற்குள் வழி நடத்திற்று. சகேயுவின் வாழ்க்கையில் மெய்யாலுமே ஒரு பெரிய ஆவிக்குரிய தாகம் இருந்ததைப் பார்க்கிறோம். அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய தாகமும் தேடுதலும் இருக்கும்பொழுது நாம் நிச்சயமாக வெறுமையாய்ப் போக மாட்டோம். ஒருவேளை அவன் வீட்டில் அதிகப் பணமும் பொருளும் இருந்தபொழுது சந்தோஷம் சமாதானம் இருந்திருக்காது. ஆனால் இயேசு கிறிஸ்து அவன் வீட்டிற்குள் வந்தபொழுது மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வீடும் இரட்சிப்பு வந்த வீடாக மாற வேண்டும் என்று வாஞ்சிக்க வேண்டும். மற்றவர்களின் பார்வையில் நம்முடைய வாழ்க்கை எவ்விதம் இருக்கிறது என்பதை விட, தேவனுடைய பார்வையில் நம்முடைய வாழ்க்கை எவ்விதமாக இருக்கிறது என்பதை நாம் நிதானித்துப் பார்ப்பது அவசியம். இயேசு கிறிஸ்து சகேயுவின் வீட்டிற்கு வந்த காரணம் என்ன? சகேயு மாத்திரமல்ல அவன் வீட்டாரும் இரட்சிக்கப்படவும் மெய்யான மாற்றமும் மறுமலர்ச்சியடையவும் அவர் விரும்பினார். அவர் அவ்விதமாகவே செய்தார்.