“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்” (ரோமர் 8:26).

இன்றைக்கு அநேகருடைய கேள்வி என்னவென்றால், நான் ஜெபிக்கிறேன் வேதத்தை வாசிக்கிறேன் ஆனாலும் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்விகள் ஏன்? நாம்  விளங்கிக்கொள்ள வேண்டிய சில முக்கியமான காரியங்கள் உண்டு. ஜெபமும் வேத வாசிப்பும் நாம் தேவனோடு தொடர்பு கொள்ளும்படியாக வழிமுறையாக அவைகள் இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கையில் வெறுமையான ஜெபமும் வேத வாசிப்பும் உதவி செய்யாது. மேலும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நமது மாம்ச பெலத்தினால் வாழப் பிராயசப்படுகிறோம். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று வேதம் சொல்லுகிறது. இன்னுமாக கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல என்றும் வேதத்தில் பார்க்கிறோம். ஆவிக்குட்பட்ட வாழ்க்கை என்பது பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கும் அவருடைய வழிநடத்துதலுக்கும் நம்மை ஒப்புக்கொடுப்பதாகும். பரிசுத்த ஆவியானவரோடு நாம் எந்தளவு தொடர்புடையவர்களாய் இருக்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக” (2கொரிந்தியர் 13:14). நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை மாம்ச பெலத்தோடு வாழப் பிரயாசப்படுகிறதே நம் ஆவிக்குரிய வாழ்க்கையின் தோல்விக்கு காரணம் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். ஆவிக்குரிய காரியங்களை ஆவியானவரின் பெலத்தினால் மாத்திரமே நாம் நிறைவேற்ற முடியும். நாம் ஒருக்காலத்தில் நம் மனசும் மாம்சமும் விரும்பினவைகளைச் செய்துவந்தோம். ஆனால் இப்போது நாம் பழைய மனுஷர்கள் அல்ல. பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுகிறவராய், நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். அவரோடு ஐக்கியப்படுகிற ஒரு வாழ்க்கையை நமக்கு கொடுக்கிறார். மேலும் பரிசுத்த ஆவியானவர் நாம் பாவத்திற்கு அடிமைகளாக நாம் வாழாதபடிக்கு, நீதிக்கென்று வாழுகிற அருமையான வாழ்க்கையில் நம்மை வழிநடத்துகிறார். “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது” (கலாத்தியர் 5:17). ஆனலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கும்பொழுது நம் பெலவீனத்தில் நமக்கு உதவி செய்கிறது மாத்திரமல்ல, நமது மாம்சத்தின் கிரியைகளை அழிக்கும்படியாகவும் நமக்கு உதவி செய்கிறார்.