கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 5                        தேவனைவிட்டு சோரம்போனாய்                        ஓசியா 9:1-17

“இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே;

உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்;” (ஓசியா 9:1)

      அருமையான நண்பர்களே! நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்கு பிரியமில்லாத மகிழ்ச்சி ஒருக்காலும் ஆசீர்வாதமாக இருக்காது. பாவத்தின் மகிழ்ச்சி நம்மை வேதனைக்குக் கொண்டுசெல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆமோஸ் 6:13 -ல் “நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்” என்று சொல்லப்படுகிறது. வேதம் என்ன சொல்லுகிறது, கர்த்தரில் மாத்திரமே மகிழ்ச்சியாக இரு. உலகத்தின் பாவங்களில் மகிழ்ச்சியை தேடாதே. உலத்தின் தவறான வழிகளில் மகிழ்ச்சியை தேடாதே. மற்ற ஜனங்களைப் போல களிகூராதே. அது ஒருக்காலும் உனக்கு ஆசீர்வதமாக இருக்காது என்பதை நீ விளங்கிக்கொள்ள வேண்டும்.

   “இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது” (யாக் 4:16) என்று யாக்கோபு சொல்லுகிறார். தீமையில் நாம் ஒருக்காலும் மேன்மைப்பாராட்டக் கூடாது. அதற்கு பதிலாக நம்முடைய வாழ்க்கையில் நாம் மனந்திரும்புவோம். தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம். அது நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் ஆசீர்வாதமாகவே இருக்கும்.

       தேவனுடைய ஜனங்கள் எப்பொழுதும் அவருக்கென்று பிரிக்கப்பட்டவர்கள். மற்ற ஜனங்களைப் போல அவர்கள் வாழும்படியாக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” (ரோமர் 12:2) என்று பவுல் சொல்லுகிறார். இந்த உலகத்திற்கு அடுத்த காரியங்களை தேடுவது நம்முடைய வாழ்க்கையில் வேதனைகளை உண்டாகும். கர்த்தர் நம்மிடத்தில் பிரியமாக இருக்கமாட்டார். உன்னுடைய வாழ்க்கையில் கர்த்தரை வேதனைப்படுத்துகிற காரியங்கள் உண்டா என்பதை ஆராய்ந்து பார்த்து, உன்னை தாழ்த்து. அது உன் ஆத்துமாவிற்கு நன்மையானதாக காணப்படும். கர்த்தர் உன்பேரில் பிரியமாய் இருப்பார். அவர் உன் வாழ்க்கையை கட்டி எழுப்புவார் என்பதில் சந்தேகமேயில்லை.