“இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்” (மத்தேயு 14:14).
தேவன் எவர்களை முன்குறித்திருக்கிறாரோ அவர்களைத் தம்முடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுவதற்கு முன்குறித்திருக்கிறார் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குரிய தன்மைகள் அதாவது குணங்கள் நம்மில் காணப்படும் என்றால், நாம் நிச்சயமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருகிறவர்களாக இருக்கிறோம். அநேக வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சாயலில் வளருவதைக் குறித்துக் கருத்தாய் செயல்படுவதில் தவறிவிடுகிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணங்களில் ஒன்று அவருடைய இரக்க குணம். இதை வேதத்தில் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். “அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்” (மாற்கு 1:40-41). மனதுருக்கம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் காணப்படுகிற மிக முக்கியமான குணநலமாக இருக்கிறது. மேலும் நம்முடைய ஜெப வாழ்க்கையிலும் மனஉருக்கமுள்ள ஒரு மனநிலை நம்மில் இருக்குமென்றால், நாம் அநேகருக்கு உண்மையான பாரத்தோடும் கருத்தோடும் ஜெபிக்க முடியும். அநேக வேளைகளில் நம்முடைய இருதயம் மிகக் கடினமானதாகக் காணப்படவும் வாய்ப்புண்டு. யோனா தீர்க்கதரிசி நினிவே மக்களுக்காக எந்தவிதமான பாரமற்றவனாய் செயல்பட்டதை நாம் பார்க்கிறோம். மேலும் நாம் மற்றவர்களுடைய குறைகளை மன்னிக்கமுடியாதவர்களாய்ப் பொறுத்துகொள்கிறவர்களாய் இல்லாமல் அவர்களைக் குற்றஞ்சாட்டுகிறவர்களாய் காணப்படுகிறோம். நாம் மனதுருக்கம் கொண்டவர்களாக இருக்கும்பொழுது இயேசுவின் சாயலில் வளருகிறறோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறது.