கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 7                துளிர்விடும் கோல்        எண் 17:1–13

     ‘அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்;’ (எண் 17:5).

     தெரிந்துகொள்ளப்படுகிறவர்கள் யார்? தேவன் இந்த உலகத்தில் தம்முடைய மக்களைத் தெரிந்துகொள்ளுகிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அப்படியானால் யார் அவர்கள்? தங்களுடைய வாழ்க்கையில் மெய்யாய் இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவ ஆவியினால் சந்திக்கப்பட்டு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள். அவர்களுடைய கோல் துளிர்க்கும். மெய்யாலுமே அவர்களுடைய வாழ்க்கை துளிர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்’ (ஏசாயா 35:1–2) என்று தேவன் சொல்லுகிறார்.

   நாம் மெய்யாலும் வனாந்திரமான ஒரு சூழ்நிலையில் கடந்துபோனாலும் தேவன் அதை துளிர்க்கச் செய்ய வல்லவராக இருக்கிறார். ஒருவேளை நம் வாழ்க்கை இன்றைக்கு வனாந்திரமாகக் காணப்பட்டாலும் கர்த்தர் நிச்சயமாக தம்முடைய மக்கள் வாழ்க்கையை பூஞ்சோலை வனமாக மாற்ற வல்லவராக இருக்கிறார். மேலுமாக தேவன்: ‘நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்’ (ஓசியா 14:5) என்று சொல்லுகிறார். நாம் துளிர்க்கிறது மாத்திரமல்ல, நாம் ஆழமாக வேரூன்றி நிற்கும் வண்ணமாக நமக்கு உதவி செய்வார். இதனை அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு கொடுக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தர்தாமே அவ்விதமாக உங்கள் வாழ்க்கையில் செயல்படுவாராக. ஆமென்!