ஆகஸ்ட் 11
“சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். (சங்கீதம் 20:7)
இந்த உலகத்தில் மனிதர்கள் குதிரைகளைக் குறித்தும் இரதங்களைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள். தன்னுடைய அழகைக்குறித்து, படிப்பைக்குறித்து, பணத்தைக் குறித்து, வீட்டைக் குறித்து, நிலங்களைக் குறித்து, ஜாதியைக் குறித்து என்று கணக்கிலடங்காத அநேகமாயிரமான காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிறார்கள். நீ எதைக் குறித்து மேன்மைப்பாராட்டுகிறாய்? ஒரு மெய் கிறிஸ்தவன் இவைகளைக்குறித்து மேன்மைபாராட்டமாட்டான். “நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்.” அப்படியென்றால் என்ன? அவருடைய அன்பைக்குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து, அவருடைய தன்மைகளைக்குறித்து, அவருடைய இரட்சிக்கும் கிருபையைக் குறித்து, இரக்கத்தைக் குறித்து, நீடிய பொறுமையைக் குறித்து அவர் தம்முடைய மக்களுக்கு எவ்விதம் நல்லவராக இருக்கிறார், நம்பிக்கையின் தேவனாக இருக்கிறார் என்று அவரையே உயர்த்தி மேன்மைபாராட்டுவார்கள்.
“நானோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக” பவுலின் அறிக்கையை, ஜெபத்தைப் பாருங்கள்.”பாவிகளில் பிரதான பாவியாகிய என்னை இரட்சித்தாரே.. என்னுடைய குருட்டாட்டத்தில் நான் அழிந்துப்போகாமல் என்னை தடுத்து ஆட்கொண்டாரே. எனக்காக அந்த ஈன சிலுவையில் தொங்கி மரித்தாரே, எனக்காக இன்றைக்கும் பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே, அவரைக் குறித்தேயல்லாமல் நான் யாரைக்குறித்து,மேன்மைபாராட்டுவேன் என்று சொல்லுகிறார்.
உன்னை மெய்யாலும் தேவன் இரட்சித்திருக்கிறார், என்ற உறுதி இருக்குமானால், நீ எதைக்குறித்து மேன்மைபாராட்டமுடியும்? தேவன் உன்னை இரட்சியாதிருப்பாரானால் நீ இந்த நேரம் உளையான சேற்றில் கிடப்பாய் என்பதை அறிவாயா? தேவகோபாக்கினைக்கு பாத்திரமாகவல்லவோ நீ இருந்திருப்பாய் !