கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 18                           திரளான சாட்சிகள்                      எபி 12:1 – 10

“மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை

சூழ்ந்து கொண்டிருக்க” (எபி 12 : 1).

            இந்த நிரூபத்தை எழுதியவர் இவ்விதமாய் சொல்லி இந்த மக்களை உற்சாகப்படுத்துகிறார். இந்த நிரூபம் யூத விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது. அநேக நெருக்கங்களினூடாக கடந்து போன இந்த மக்கள் தங்கள் விசுவாசத்தை விட்டு விடக்கூடிய அளவில் அதிகமான இடர்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டன. அவர்களை இந்தகாலத்தில் விசுவாசத்தை விடாமல் உறுதியாயிருக்கும்படி, உற்சாகப்படுத்தும்படி எழுதப்பட்டதுதான் இந்த எபிரேயருக்கு எழுதின நிரூபம். ’உங்களுக்கு முன்பாக உங்களைப்போல விசுவசத்திற்காக நின்ற பரிசுத்தவான்களைப் பாருங்கள்’ எபிரேயர் 11ம் அதிகாரம் முழுவதுமாக விசுவாசத்தின் வழியாகச்சென்ற மக்களைக்குறித்துச் சொல்லி, இவ்வளவு சாட்சிகளை உங்கள் முன்பாக வைத்திருக்கிறாரே என்று சொல்லுகிறார். அவர்கள் விசுவாசபாதையில் தொடந்து ஓடி, தங்கள் ஓட்டத்தை வெற்றியோடு முடித்தார்கள் என்பதைப்பாருங்கள். ஆகவே நீங்கள் சோர்ந்துபோகாமல் அவர்களைப்போல தொடர்ந்து விசுவாச ஓட்டத்தில் முன்னேறுங்கள் என்று உற்சாகப்படுத்துகிறார். அருமையானவர்களே! இவ்விதமான விசுவாச மக்களின் வாழ்க்கைக்கு ஒருபெரிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறதல்லவா?

            சபை சரித்திரத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாசிக்கவேண்டும். அதை வாசிக்கும் போது எவ்விதம் நமது ஆதிபிதாக்கள் முன்னோர்கள், சீர்த்திருத்தவாதிகள் சத்தியத்திற்கென்று நின்று தேவனை மகிமைப்படுத்தினார்கள் என்பதைப் பார்க்கமுடியும்.  மரணமேயானாலும் விசுவாசத்தினால் அஞ்சாமல் அதற்கும் ஒப்புக்கொடுத்து தங்கள் ஓட்டத்தை முடித்தார்கள் என்பவைகள் நமக்கு பெரிய சவாலாய் இருக்கிறது! அநேகம் நல்ல தேவ மனிதர்கள். ஊழியர்கள், மிஷ்னரிகள் எவ்விதம் தேவனுக்கென்று வாழ்ந்தார்கள் என்பவற்றை நாம் அறியவேண்டும். ஆகவே இவ்விதமானவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை வாசிக்க வேண்டும். நாம் விசுவாசத்தில்  பெலப்பட இது மிகவும் உதவியாயிருக்கும். உனக்கு முன்பாக தேவன் உன்னதமான சாட்சிகளை வைத்திருந்தும், நீ தொடர்ந்து எப்படி அவிசுவாசத்தில் நிலைத்திருக்க  முடிகிறது?