“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 5:9).

இந்த தேவனை நாம் இன்னும் சரியாக அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் இந்த மகாப் பெரிய தேவனை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசை நமக்குத் தேவை. அநேக வேளைகளில் நாம் மனித சிந்தையின் அளவில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த உலக மக்களைப் போல நாம் வாழுகிறதினால் இந்த உலகத்தின் அளவுகளில் நாம் சிந்தித்து அதின் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பிரயாசப்படுகிறோம். ஆனால் தேவனுடைய ஜனங்கள் அவருடைய வல்லமையையும் மகத்துவத்தையும் சார்ந்தவர்களாக வாழுகிற கிருபையை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் ஆராய்ந்து முடியாத  பெரிய காரியங்களைச் செய்கிறவர் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மை இரட்சித்திருப்பதே மிகப் பெரிய அதிசயம். ஒவ்வொரு நாளும் கிருபையாய் நம்மைக் காத்துவருகிறார். இதை நாம் எண்ணிப்பார்க்கும்போது அவைகள் அதிசயமாக இருக்கிறதல்லவா! இந்த உலகத்தின் மக்கள் அழிவின் பாதையில் சென்றுக்கொண்டிருக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் தேவன் ஏன் இவ்விதமான கிருபையை கொடுக்க வேண்டும்? இது மிக ஆச்சரியமானது. ஆகவே தேவனுக்கு நாம் எப்பொழுதும் துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் அவருக்கு நன்றி செலுத்துவது எவ்வளவு அருமையான காரியம்!