கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 7         திரளான யோசனை        ஏசாயா 47:1-13

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப் போனாய்” (ஏசாயா 47:13)

                  யோசனை செய்வது தவறு என்று வேதம் சொல்லவில்லை. ஆனால் அந்த யோசனை எந்தவிதமானது, எப்படிப்பட்டது என்பதில்தான் பிரச்சனை. இந்த அதிகாரம் முழுவதும் வாசித்துப் பார்ப்பீர்களானால் தேவன் இந்த இஸ்ரவேல் மக்களைப் பார்த்து எந்த சூழ்நிலையில் இதைச் சொல்கிறார் என்றும், எவ்விதமாக இந்த மக்கள் காணப்பட்டார்கள் என்றும் கண்டுக்கொள்ள முடியும். இந்த வசனத்தின் பின் பகுதியைப் பார்ப்பீர்களானால் இந்த மக்கள் தங்கள் யோசனைக்கு உதவியாக யாரைத் தேடுகிறார்கள் என்றும் பார்க்கமுடியும். ‘ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி பார்க்கிறவர்களுமே’. வேதத்தை விட்டு இருளைத் தாங்களாகவே தெரிந்து கொள்ளுவது அழிவைத் தேடிக்கொள்வதாகும்.

            ஆம்! இன்றைக்கு தங்களுடைய திருமணத்திற்கு முகூர்த்த நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் மற்ற காரியங்களிலும் புற ஜாதிகளைப்போன்று நாள், நேரம் பார்த்துக்கொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டும் இருகிறார்கள். இவர்களுக்கும் தேவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இவ்விதமான மக்கள் தங்கள் யோசனைகளினால் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மெய்யான தேவ ஆசீர்வாதத்தைப் பார்க்க முடியாது. எவ்வளவு ஞானமாக அவர்கள் யோசனை செய்து திட்டமிட்டுச் செய்தாலும் தேவன் அதில் இருக்கமாட்டர். அவர்கள் இளைத்துதான் போவார்கள். அதாவது முடிவில் வெட்கப்பட்டுப் போவார்கள்.

            இன்றைக்கு பக்தியையும், யுக்தியையும் இணைக்கும் கிறிஸ்தவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்தவ சடங்காச்சாரங்களோடு புறஜாதி பழக்கவழக்கங்களையும் கொண்டிருப்பார்கள். ஆனால் மெய் கிறிஸ்தவன் தன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்தவன். அவன் யோசனைகள் உறுதிப்படும். (நீதி 16:3). எல்லாவற்றிற்கும் அவன் தேவனை மாத்திரமே சார்ந்து செயல்படுவான். வேதத்தை அவன் தன் வழிகாட்டியாய்க் கொண்டிருப்பான்.