அக்டோபர் 6          

“யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்” (எரேமியா 32: 19)

மனிதனுடைய யோசனை நம்மை சரியான வழியில் நடத்தும் என்று சொல்லமுடியாது. அவனுடைய யோசனை அநேக சமயங்களில் இந்த உலக அறிவைக்கொண்டு கொடுக்கப்படும் யோசனையாகவே இருக்கும். அது நமக்கு நீண்டகால வாழ்க்கைக்கு உதவாமல் போகலாம். ஆனால் நாம் தேவனுடைய யோசனையைத் தேடுவோமானால் அது நன்மை பயக்கும். தேவன் அவ்விதம் தனிப்பட்ட மனிதனுக்கும் தமது ஆலோசனையைத் தந்து நடத்துகிறாரா? ஆம்! எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத்  துதிப்பேன்.” (சங்கீதம் 16:7) நம்முடைய அறிவு எல்லைக்குட்பட்டது. நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறியோம். தேவ ஆலோசனை நாம் தப்பிப்போகாதபடி காத்துக்கொள்ளும்.

இன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தேவ ஆலோசனையை தேடாததாலும், வாஞ்சிக்காததாலும் தங்களுடைய சொந்த வழியில் நடந்து, பிறகு அநேக சமயங்களில் வேதனைக்குள்ளாக நுழைந்துவிடுகிறார்கள். இந்த தேவன் நமக்கு கொஞ்ச காலம் மட்டும் ஆலோசனைக் கொடுத்து, பின்பு கொடுக்காமல் போகிறவர் அல்ல. சங்கீதகாரனாகிய ஆசாப் எவ்வளவு நம்பிக்கையை தெரிவிக்கிறார் பாருங்கள். உம்முடைய ஆலோசனையின்படி என்னை நடத்தி முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுகொள்வீர்.” (சங்கீதம் 73:24) அவருடைய ஆலோசனை நமக்கு , நம்முடைய கடைசி வேளை வரைக்கும் உண்டு அது மாத்திரமல்ல அந்த ஆலோசனை நித்திய மகிமைக்குள் பிரவேசிக்கும் வரை, நாம் தவறாமல் செல்ல வழி நடத்துகிறதாயிருக்கிறது.

அன்பானவர்களே! இந்த சங்கீதக்காரன் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பாருங்கள். “நான் பெலவீனன், நான் அறிவீனன். ஆனால் என்னைத் தெரிந்துக்கொண்ட தேவன் என்னைக் கைவிடாமல் நித்திய மட்டுமாக வழிநடத்துவார்.”  எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய ஆலோசனையைத் தேடுங்கள். அவர் ஆலோசனையில் பெரியவர், மகத்துவமானவர், உன்னதமானவர். அப்படி அவருடைய ஆலோசனையைத் தேடும் பொழுது, அவரை மகிமைப்படுத்துகிறாய். அது உனக்கு மேன்மையையும் கனத்தையும் கொண்டுவரும்.