கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 18                          கிருபையின் தேவன்             சங்  89:20–37

     ‘என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்;

என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்’ (சங்கீதம் 89:24).

         கர்த்தர் உன் வாழ்க்கையில், நீ மரிக்கும் மட்டுமாக கிருபையுள்ளவராகவே இருக்கிறார். அதுமட்டுமல்ல, உன் வாழ்க்கையில் உன்னை உயர்த்துகிறவர் அவர். ஆம்! நிச்சயமாகவே அவருடைய கிருபை நம்மோடு இருக்கும்பொழுது, நாம் எப்பொழுதும் உயர்ந்தவர்களாகவே காணப்படுவோம். ஆவிக்குரிய வாழ்க்கையில் மேலான நிலைகளில் வாழுகிறவர்களாக  நாம் காணப்படுவோம். சரீரப்பிரகாரமான நம் வாழ்க்கையில், நம்முடைய தேவைகளை கர்த்தர் சந்தித்து, மற்றவர்களுக்கு முன்பாக நாம் வெட்கப்பட்டு போகாதபடிக்கு செய்வார் என்பதில் சந்தேகமில்லை. 

      இந்த அருமையான சங்கீதத்தில் மேலும், ‘என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்’ (சங்கீதம் 89:28) என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் தேவனுடைய ஜனங்களாக இருக்கும்பொழுது, அவருடனே உடன்படிக்கை பண்ணின ஜனங்களாகக் காணப்படுகிறோம். அவர் நம்முடனே, உன்னைத் தாங்குவேன், சுமப்பேன், தப்புவிப்பேன் என்ற அருமையான உடன்படிக்கைகளை ஏற்படுத்தின தேவனாக இருக்கிறார். இந்த உடன்படிக்கை அநாதி சிநேகத்தால் நிறைந்தது. அந்த உடன்படிக்கையை நிச்சயம் அவர் உறுதிப்படுத்துவார். 

       மேலும் தேவன் தம்முடைய கிருபையை நம்மைவிட்டு விலக்காமல், நம்மை எப்பொழுதும் காத்துக் கொள்ளுகிறவராக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர்: ‘என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்’ (சங்கீதம் 89:33) என்று சொல்லுகிறார். அவர் உண்மையில் ஒருக்காலும் தவறுவதில்லை. அவர் கர்த்தர், மாறாதவர். அன்பானவர்களே! தேவனுடைய உண்மைத்தன்மையை நாம் சார்ந்து கொள்ளுவோம். அவர் நம்மைக் கைவிடுகிற தேவனல்ல. அவர் நித்திய உடன்படிக்கையின் தேவன்.