பிப்ரவரி 4         கிருபையின் அடிப்படையில்            1 பேதுரு 5:1-11

“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5:5).

      கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிருபையைச் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கையாகும். கிருபைக்கும் பெருமைக்கும் சம்பந்தமில்லை. கிருபை என்பது எப்பொழுதும் ‘நான் மிக கீழாக இருக்க வேண்டியவன். இந்த அளவுக்கு ஆண்டவர் என்னை உயர்த்தி இருக்கிறார்’ என்று கிருபையில் மேன்மை பாராட்டுவதாகும். ஆனால் அநேகர் தங்களுடைய சுயபலத்தில் பெருமை பாராட்டுகிறவர்கள் ‘நான் மேலாக இருக்க வேண்டியவன். ஆனால் இப்படி ஆகிவிட்டேன்’ என்று செல்லக்கூடிய மனநிலையில் வாழ்பவர்கள். கிருபையின் அடிப்படையில் வாழ்கிறவர்கள் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பார்கள், தேவனுக்கு நன்றி உணர்வோடு வாழ்கிறவர்களாகக் காணப்படுவார்கள். ஆனால் இந்த கிருபையின் வாழ்க்கையை பெற்று அனுபவிப்பதற்கு அடிப்படையாக  தாழ்மை அவசியமாக இருக்கிறது. தாழ்மை இல்லாமல் நாம் கிருபையை விலைமதிக்க முடியாது. கிருபையின் அடிப்படையில் வாழ்கிற வாழ்க்கையைப் போல மகிமையான காரியம் என்பது வேறெதுவுமில்லை.

      இங்கு வேதம் ‘மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லுகிறது. மனத்தாழ்மையை நாம் எவ்விதம் அணிந்து கொள்ளுவது? நமக்கு ஏற்படும் பெருமையான எண்ணங்களை நாம் தகர்த்தெறிந்து கிறிஸ்துவின் சிலுவையின் முன்பாக நம்மை தாழ்த்தி பெருமையை உடைப்பதே அதற்கான வழிமுறையாகும். மனத்தாழ்மையாக இருக்கும்பொழுது நாம் தேவனுக்கு முன்பாக நற்சாட்சி பெற்றவர்களாகக் காணப்படுவோம். “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி 2:3) என்று பவுல் சொல்லுகிறார். பொதுவாகக் கிருபையைச் சார்ந்து வாழ்கிறவர்கள் மற்றவர்களைப் பார்த்து வாழ்கிறவர்கள் அல்ல. தேவனை நோக்கிப் பார்த்து, அவரின் உன்னதமான மகிமையின் பரிசுத்தத்தைப் பார்த்து, தன்னில் காணப்படும் பாவத்தன்மையை உணர்ந்து தன்னைத் தாழ்த்துகிறவர்களாகக் காணப்படுவார்கள். கிருபையின் அடிப்படையில் வாழ்கிறவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள்.