ஜனவரி 14                      கிருபையும் சத்தியமும்          சங்கீதம் 36:1-12

“கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது;

உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது” (சங்கீதம் 36:5).

      இந்த வசனத்தில் அருமையான இரண்டு முத்துக்களைப் பார்க்கிறோம். ஒன்று கிருபை, மற்றொன்று சத்தியம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் சத்தியமென்கிற கிருபை வரும்பொழுது அவனுடைய வாழக்கையானது உன்னதமான மகிமையான நிலைக்கு மாறுகிறது. “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது” (சங் 57:10) என்று சொல்லுகிறது. ஆம்! தேவனுடைய கிருபைக்கு அளவே இல்லை. வானத்திற்கு எவ்விதம் எல்லை இல்லையோ அவ்விதமாக தேவனுடைய கிருபைக்கும் எல்லையில்லை.

      அப்படியானால் கிருபை என்றால் என்ன? தகுதியில்லாத மனிதனுக்கு கடவுள் அளிக்கும்படியான ஈவு (Gift). இந்த கிருபைக்கு அளவும், எல்லையும் கிடையாது. சத்தியமும் அதுபோலவே காணப்படுகிறது. இந்த சத்தியமானது மேகமண்டலங்களின் பரியத்தம் எட்டுகிறது என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் வாழுகிற இந்த உலகத்தில் சத்தியத்தையும், கிருபையையும் வாஞ்சிக்கும்பொழுது நம் வாழ்க்கையில் எல்லையில்லாத தேவனுடைய அன்பை ருசிப்பவர்களாகவும், எல்லையில்லாத தேவனுடைய மகத்துவத்திற்குள் நாம் பிரவேசிக்கிறவர்களாகவும் காணப்படுகிறோம். இதை விட மேன்மையான ஆசீர்வாதம் வேறெது நமக்கு வேண்டும்?

      தேவன் நமக்கென்று கொண்டிருக்கிற வழிகளும், திட்டங்களும் மிக உன்னதமானவைகள். “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:9) என்று வேதம் சொல்லுகிறது. ஒரு மெய்யான கிறிஸ்தவன் தேவனுடைய சத்தியத்தினால் பிரகாசிக்கப்படுகிறவனாக, கிருபையைப் பற்றிகொள்ளுகிறவனாகக் காணப்படுகிறான். அவனுடைய வாழ்க்கையில் தேவன் அவனுக்கென்று உயர்ந்த திட்டத்தை வைத்திருக்கிறார். அன்பானவர்களே! உங்கள் வாழ்க்கை சோர்வுக்குள்ளாக சென்றுகொண்டிருக்கிறதா? நீங்கள் ஒருக்காலும் சோர்ந்து போகவேண்டிய அவசியமில்லை. தேவனுடைய கிருபையையும், சத்தியத்தையும் பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு வாழ்க்கையில் போராடக் கற்றுக்கொள்வோமாக.