மார்ச் 8   

“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்”

எபேசியர் 1:13

       ‘இரட்சிப்பின் சுவிசேஷம்’ எவ்வளவு அழகான வார்த்தை இது. இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனம், நம்முடைய வாழ்க்கையில் நம்மை மீட்கப்பட்ட ஜனங்களாக இந்த உலகத்தில் வாழ பெலத்தைக் கொடுக்கிறது. எபேசு பட்டணத்து மக்கள் இந்த சத்திய வசனத்தைக் கேட்டபொழுது இரட்சிப்புக்குள் வழி நடத்தப்பட்டார்கள். சுவிசேஷம் மனிதனை இரட்சிக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ என்று மாற்கு 16:15-ல் சொன்னார். இந்த சுவிசேஷம் மிகப்பெரியது.

      இந்த சுவிசேஷத்தைப் பற்றி பவுலும் கூட, “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16) என்று சொல்லுகிறார்.

தேவனுடைய சுவிசேஷம் பற்றி நாம் வெட்கப்படக் கூடாது. தேவனுடைய சத்திய வசனமே நமக்கு பெலனைக் கொடுப்பதாக இருக்கிறது. அவருடைய வார்த்தையை எந்த அளவுக்கு வாசித்து, தியானித்து, சிந்திக்கின்றோமோ அந்த அளவுக்கு நாம் ரட்சிப்பின் வழியில் முன்னேறிச் செல்வோம்.

      இன்றைக்கு அநேக மக்கள் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும், தியானிப்பதிலும் மிகவும் குறைவுபட்டுப் போன நிலையில் இருக்கிறார்கள். அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் சத்தியத்திற்கான தாகமும் வாஞ்சையும் இல்லாமல் வாழுகிற ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுவிசேஷம் இரட்சிக்கும் வல்லமையுள்ளது. சுவிசேஷமானது நமக்குள் பரிசுத்த ஆவியானவர் முத்திரையிடப்பட்டு, நாம் தேவனுடைய ஜனங்கள் அவருக்கு சொந்தமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இன்றைக்கு அநேகர் உறுதியான கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலைத்திராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் வருத்தமான ஒரு காரியமாக இருக்கிறது.