மே 6                    

“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக்கா 24:47).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசியாக தன்னுடைய சீடர்களுக்குக்  கொடுத்த கட்டளையில் மனந்திரும்புதலைக் குறித்தும் பாவ மன்னிப்பைக் குறித்தும் முக்கியப்படுத்தி சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஏன் மனந்திரும்புதல் அவசியம்? ஒவ்வொரு மனிதனும் இயற்கையாக பாவி என்று வேதம் சொல்லுகிறது. தேவனுக்கு சத்துருவாக அவன் இருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அவன் முதலாவதாக தேவனோடு ஒப்புரவாவது மிக அவசியம். நாம் எவ்விதம் தேவனோடு ஒப்புரவாக முடியும்? நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய பாவங்களை நினைவு கூர்ந்து, அவருக்கு முன்பாக மனந்திரும்புவதின்  மூலமாக மாத்திரமே தேவனோடு ஒப்புரவாக முடியும். அவ்விதமாக அல்லாமல் தேவனுடைய ஆசீர்வாதத்தை ஒரு மனிதன் பெற்றுக் கொள்ள முடியாது. அதேவிதமாக அவன் மனம் திரும்பினால் தேவன் அவனுடைய பாவங்களை மன்னிக்கிறார் என்பதும் நிச்சயமே. “முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்” (அப்போ 26:20).

இந்த இடத்தில் பவுல் தேவனுடைய சத்தியத்தை அறிவிக்கும் பொழுது இவ்விதமாக மனந்திரும்புவதின் அவசியத்தைக் குறித்துப் பேசுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் இன்றைக்கு இது பொதுவாக மக்கள் மத்தியில் மனந்திரும்புதலைக் குறித்து போதிக்கப்படுவது இல்லை. வேதத்தைச்  சரியாய்ப்  போதிக்க தவறுகிற நிலையையே சபைகளில் காணப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் தேவனோடு ஒப்புரவாதற்கு, மனந்திரும்ப வேண்டியவனாக இருக்கிறான். ஏனென்றால் மனந்திரும்பாமல் மெய்யான விசுவாசத்தை ஒரு மனிதன் பெற்றுக்கொள்வது கூடாதகாரியம். அவன் மனம் திரும்பும் பொழுது மாத்திரமே உண்மையான விசுவாசத்தை பெற்று வாழக் கூடியவனாக  காணப்பட முடியும். ஆகவே நம்முடைய சபைகளில் மனந்திரும்புதலை முக்கியப்படுத்திப்  போதிப்பது அவசியமாக இருக்கிறது. நாம் முதலாவது மனம்திரும்பி ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போமாக.