கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 2                   நுகத்தைச் சுமக்கிறது நல்லது          புலம்பல்  3:20-30

“தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” (புலம்பல் 3:27)

    நுகம் மனிதனுடைய வாழ்க்கையில் விரும்பப்படுவதில்லை. அவைகளை அவன் பொதுவாக விரும்புகிறதில்லை. ஆனால் வேதம் சொல்லுகிறது, அது நல்லது. உன்னுடைய ஆரம்ப நாட்களில் உன்மேல் நுகம் வைக்கப்படாதிருந்தால் நீ எப்படி ஆண்டவரிடத்தில் வந்திருப்பாய் என்பதைச் சிந்தித்துப்பார். உன் வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளும், ஏமாற்றங்களும், உன் சொந்த பெலத்தால் பரிசுத்தமாக ஜீவிக்கமுடியாது என்கிற உணர்வும் இல்லாமல் நீ இயேசுவண்டை வந்திருக்கமாட்டாய். இன்னும் எத்தனையோ விதங்களில், வழிகளில் நுகம் உன்மேல் வைக்கப்பட்டபோது அவைகள் தீமைக்குகேதுவாக அல்ல நன்மைக்கேதுவாக செயல்பட்டிருக்கின்றன என்று உறுதியாய் உன்னால் சொல்லமுடிகிறது அல்லவா! நுகத்தைக்கண்டு பயப்படாதே அவைகள் உன் கழுத்தை அழுத்தினாலும் உன்னை இணங்கச்செய்யும், தேவனின் கட்டுப்பாட்டிற்குள் உன்னைக் கொண்டு செல்லும்.

    ஆண்டவராகிய இயேசு தன்னுடைய நுகத்தைப் பற்றி சொல்லுகிறார். “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத் 11:29) நமது வாழ்க்கையில் இவ்விதமான நுகங்கள் தேவை. உனக்கு மனத்தாழ்மை, நீடிய சாந்தம் தேவையாயிருக்கிறது என்றால் உன்மேல் வைக்கும் நுகத்தை நீ ஏற்றுக் கொள்ளும்போது அவைகளை நீ கற்றுக்கொள்வாய்.

    நீ கற்றுக்கொள்ளும்படியாக, கோபத்தை உண்டு பண்ணக்கூடிய காரியங்கள், உன்னைத் தாழ்த்தும்படியான காரியங்கள், மற்ற மனிதர்கள் மூலம், அல்லது சில சமயங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள், அதிகாரிகள், உறவினர்கள் அல்லது யார் மூலமாகிலும் உனக்கு கொடுக்கப்படலாம். ஆனால் அவைகளைத் தாழ்மையாய் ஏற்றுக்கொள். அது உன் ஆத்துமாவுக்கு நல்லது. நீ அவ்விதம் ஏற்றுக்கொள்வாயா?