ஜனவரி 26
“பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி” (லூக்கா 10:33).
இந்த நல்ல சமாரியன் யார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவருடைய குணாதிசயங்களில் ஒன்று மனதுருக்கம். நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு தேவன் மனதுருகுகிறவராக இருக்கிறார். ஒருவேளை நம் வாழ்க்கை கள்ளர் கையில் அகப்பட்ட மனிதனைப் போல காணப்படலாம். நம் வாழ்க்கையில் நாம் மற்றவர்களால் காயப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, குற்றுயிராக தனித்து விடப்பட்டிருக்கலாம். நம்மேல் மனதுருகுகிற நம் மேய்ப்பர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு நல்ல சமாரியன்: “கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்” (லூக்கா 10:34).
நம் தேவன் நம்முடைய காயங்களைக் கட்டுகிறார். நம் காயங்களை மனிதர்களால் கட்ட முடியாது, தேற்ற முடியாது. மேலும் நாம் குற்றுயிராக விடப்பட்ட சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து கிருபையும் சத்தியமும், இரக்கமும் தயவும், அன்பும் பரிவும் ஊற்றி நம் காயங்களை கட்டுகிறவராக இருக்கிறார். நம்மை முற்றும் முடியப் பாதுகாத்து பராமரிக்கிறவராக இருக்கிறார். இப்படிப்பட்ட தேவனை நம் வாழ்க்கையில் சார்ந்து வாழப்பழகுவோம். நாம் மனிதர்களினால் பாதிக்கப்படும்பொழுது, நம்முடைய உணர்வுகளையும், வலிகளையும், வேதனைகளையும் அறிந்திருக்கிற ஆண்டவரிடத்தில் நாம் செல்லுவோம். அவர் நம்மை அரவணைத்து ஏற்றுக்கொள்ளுகிறவராக இருக்கிறார். அவர் தமது வார்த்தையை அனுப்பி குணமாக்குகிறவராக இருக்கிறார். நம் பாவங்களை மன்னித்து நித்திய ஜீவனை அளிக்க வல்லவராகிய அவரை நாம் பற்றிக் கொள்ளக்கடவோம்.