“ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12:14).
தேவனுடைய வார்த்தையை நாம் முழுவதுமாக நம்புவதே மெய் விசுவாசம். இந்த இடத்தில் ஆண்டவர் மனிதனுடைய ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் வெளியே கொண்டு வருவார் என்று சொல்லப்படுவது, மிகவும் பயங்கரமான ஒரு காரியம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய வாழ்க்கையில் இரட்சகராக கண்டுகொண்ட ஒரு வாழ்க்கையின் மூலம் தன்னுடைய பாவங்களை உணர்ந்து, தேவனோடு ஒப்புரவாகி, அவருடைய இரத்தத்தினால் தன்னுடைய பாவங்கள் கழுவப்பட்ட மனிதனுக்கு, இது பயப்படக்கூடிய காரியமல்ல. ஆனால் தேவனை அறியாத ஒரு மனிதனுடைய நிலை மிகவும் பயங்கரமானது. தேவன் இந்த உலகத்தில் இன்றைக்கு இரட்சகராக இருக்கிறார். ஆனால் அவர் நியாயாதிபதியாக நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது, அவருடைய இந்த நியாயாசனத்திற்கு முன்பாக ஆண்டவரை அறியாதவர்களாய் இருப்போமானால், எவ்விதம் காணப்படுவோம் என்பது மிக பயங்கரமான ஒரு காரியம்.
நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரை அறிந்து பயத்தோடும், நடுக்கத்தோடும் நாம் தேவனுக்கு பயந்து அவருடைய வழிகளில் காணப்படுவது மிக அவசியமான காரியமாய் காணப்படுகிறது. “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்” (2 கொரிந்தியர் 5:10). தேவனுக்குப் பயந்து வாழுகின்ற ஒரு வாழ்க்கை இல்லை என்றால், இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு நம்பிக்கை என்பதே கிடையாது. இன்றைக்கு அவர் ரட்சகராக, கிருபையின் தேவனாக, இரக்கங்களின் ஆண்டவராக இருக்கிறார். ஆனால் ஒருநாள் நியாயாதிபதியாக அரியாசனத்தில் உட்கார்ந்தவராக நியாயம் தீர்க்கிறவராக இருப்பார். நாம் இன்றைக்கு அவரை இரட்சகராக அறிந்து கொள்ள விருப்பம் அற்றவர்களாக இருப்போமானால், நிச்சயமாக நியாயாதிபதியாக அவரைச் சந்திக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.